உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நிகழ்ந்த விபத்தில் 40 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு 49 வயது வேன் ஓட்டுநர் உதவி வருகிறார் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 10 - உட்லண்ட்ஸ் அவென்யூ 7 சந்திப்பில் விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தன்று பிற்பகல் 1.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அது தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் அந்த விபத்து தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் உணர்வற்றுக் கிடந்த மோட்டார் சைக்கிளோட்டியைத் தூக்கிச் சென்று உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் அனுமதித்ததாக அது தெரிவித்தது.
ஆயினும், அந்த ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பின்னர் காவல்துறை கூறியது.
மோட்டார் சைக்கிள் ஒன்று சம்பவ இடத்தில் விழுந்து கிடந்ததை, விபத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட காணொளியில் காணமுடிந்தது.
அந்தக் காணொளியை சிங்கப்பூர் சாலை விபத்துகள் தொடர்பான (Singapore roads accidents.com) இணையத்தளம் ஒன்று ஜனவரி 15ஆம் தேதி பதிவேற்றி இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளை நிற வேன் ஒன்றின் அருகில் மோட்டார் சைக்கிளோட்டியின் தலைக்கவசம் கிடந்ததையும் அந்தக் காணொளி காட்டியது.
விபத்து தொடர்பான விசாரணை நீடிக்கிறது.