உட்லண்ட்சில் மே 9ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டி ஒருவர் உயிரிழந்தார். இதன் தொடர்பில் 43 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சுயநினைவை இழந்த 36 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டி, கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் இறந்து விட்டதாகவும் காவல்துறை சனிக்கிழமை (மே 10) அன்று தெரிவித்தது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 12ல் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 6.25 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் கூறின.
கவனக்குறைவாக பேருந்து ஓட்டிய ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டில் மோட்டார்சைக்கிளோட்டி அல்லது பின்னால் அமர்ந்து சென்றவர்கள் தொடர்பான விபத்து, ஒட்டுமொத்த விபத்துகளுடன் ஒப்பிடும்போது 55.2 விழுக்காடாக இருந்தது. இத்தகைய விபத்துகளில் 59.9 விழுக்காடு உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சாலைப் போக்குவரத்து விபத்துகளின் ஆண்டறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் 14.7 விழுக்காடு மட்டுமே. ஆனால் மோட்டார்சைக்கிளோட்டிகள் அதிக விபத்துகளில் சிக்குகின்றனர்.

