ஷா சென்டருக்கு அடுத்த சாலையோரத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று, ஒரு கார் பயணிகளை இறக்கிவிடவிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளோட்டி அதை இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றார்.
ஆனால் பயணி இறங்குவதற்காக கதவைத் திறந்தபோது, மோட்டார் சைக்கிளோட்டி அதில் மோதி கீழே விழுந்தார்.
காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலை சுமார் 6:20 மணியளவில் கிளேமோர் ஹில் சாலையில் நடந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட கார்கேமரா காட்சிகள், ஷா சென்டருக்கான இறங்குமிடத்திற்கு அருகில், சாலையில் ஒரு வெள்ளை நிற ஹோண்டா கார் நின்றிருப்பதைக் காட்டியது.
அந்த நேரத்தில் காரில் எச்சரிக்கை விளக்குகள் எரியவில்லை.
ஒரு மோட்டார் சைக்கிளோட்டி நிறுத்தப்பட்ட காருக்கும் சாலையோரத்துக்கும் இடையில் கடந்துசெல்ல முயன்றபோது, காரிலிருந்து பயணி ஒருவர் வெளியே வர இடது பின்புறக் கதவைத் திறந்தார்.
பாதி திறந்திருந்த கதவில் மோதியதில், மோட்டார் சைக்கிளோட்டி தனது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தார்.
தொடர்புடைய செய்திகள்
நீண்ட கைச்சட்டை அணிந்த பயணி ஒருவர், காரில் இருந்து இறங்கி, கீழே விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி உதவச் சென்றார். அலுவலக உடை அணிந்திருந்த மேலும் சிலரும் உதவுக்குச் சென்றனர்.
இச்சம்பவத்தில் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்து இணையவாசிகள் பலவாறு கருத்துரைத்தனர்.
சிங்கப்பூர் சாலைகளில் பொதுவான நடைமுறையில் இல்லாத, இடதுபுறத்தில் முந்திச் செல்வதைக் கண்டித்து, மோட்டார் சைக்கிளோட்டியை இணையவாசிகள் சிலர் குறை கூறினர்.
கார் ஓட்டுநர், ஒரு பயணியை இறக்கிவிடுவதைக் குறிக்க, சாலை ஓரத்திற்கு அருகில் காரை நிறுத்தி, எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டிருக்க வேண்டும் என்று மேலும் சிலர் சுட்டிக்காட்டினர்.
விபத்தைத் தொடர்ந்து, ஒருவருக்கு சிறு காயங்கள் உள்ளதா என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மதிப்பிட்டதாகவும் அந்த நபர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

