உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மோட்டார்சைக்கிளுக்கும் காருக்கும் இடையே விபத்து ஏற்பட்டதில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவிற்குப் பின் ஏற்பட்ட இந்த விபத்து, சோதனைச்சாவடிக்கு அருகே அண்மையில் ஏற்பட்ட விபத்துகளில் ஒன்று.
மோட்டார்சைக்கிளுக்கும் காருக்கும் நேர்ந்த அந்த விபத்து பற்றிய தகவல் நள்ளிரவு 12.10 மணிக்குக் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்திற்குள்ளான மோட்டார்சைக்கிளின் 27 வயது ஓட்டுநர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
இடப்பக்கம் சேதமடைந்த மஞ்சள் நிற அயோன் சொகுசு வாகனத்தைக் காண்பிக்கும் படங்கள் ஃபேஸ்புக்கில் தற்போது வலம் வருகின்றன.
அதே படங்களில், காருக்குப் பின்னே பக்கவாட்டில் சாய்ந்து கிடந்த மோட்டார்சைக்கிள் சேதமடைந்து காணப்பட்டது. அந்த மோட்டர்சைக்கிள் மலேசியாவில் பதிவானதாகவும் தெரிய வந்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

