செம்பவாங்கில் நிகழ்ந்த ஒரு விபத்து தொடர்பாக 67 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
செம்பவாங் டிரைவ்வுக்கும் அந்த வட்டார புளோக் 463க்கு இட்டுச் செல்லும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அந்த விபத்து நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிள், டாக்சி சம்பந்தப்பட்ட அந்த விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 10.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
சுயநினைவற்றுக் கிடந்த 24 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கூ தெக் புவாட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடுமையான காயத்தை ஏற்படுத்தும் வகையில் போதுமான கவனமின்றி வாகனத்தை ஓட்டிய குற்றத்துக்காக டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
விபத்து நிகழ்ந்த விதம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.