லிம் சூ காங் சாலையில் ஜூன் 5ஆம் தேதி மோட்டார்சைக்கிளோட்டியுடன் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அப்பேருந்தின் 58 வயது ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் அதிகாலை 2 மணியளவில் தகவல் கிடைத்தது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த 19 வயது மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் இல்லை என்று அவை தெரிவித்தன.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி கடுமையான காயம் விளைவித்ததாக அந்தப் பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, சாலையில் மோட்டார்சைக்கிளோட்டிகள் சிலர் வேகமாகச் செல்வதைக் காட்டியது.
விபத்துக்கு முன்னர் அந்த வெள்ளை நிறப் பேருந்து சாலையில் திரும்புவதை வேறொரு காணொளி காட்டியது. அவ்வழியாகச் சென்ற முதல் இரு மோட்டார்சைக்கிளோட்டிகள் நூலிழையில் தப்பினர். ஆனால் மூன்றாவது மோட்டார்சைக்கிளோட்டி, அந்தப் பேருந்தின் பின்புறத்தின்மீது மோதினார்.
விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.