சிறுபேருந்து, லாரி, மோட்டார்சைக்கிள் ஆகியவை ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் (ஈசிபி) புதன்கிழமையன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, 27 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிறுபேருந்தில் பயணியாக இருந்த 38 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் காவல்துறை விசாரணையில் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை.
மரினா கரையோர விரைவுச்சாலை வெளிவழிக்கு முன்னர் நகரை நோக்கிச் செல்லும் ஈசிபி விரைவுச்சாலையில் விபத்து நடந்ததாக புதன்கிழமை காலை 11 மணிவாக்கில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவின்றி இருந்ததாகவும், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் கூறினர். விசாரணை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அச்சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்த இல்லத் தாதியான திருவாட்டி லின் லொங்-யாம், 32, உடனடியாகத் தமது காரை விட்டு வெளியேறி, அவசர மருத்துவ வாகனச் சேவையைத் தொடர்புகொண்டார்.
மோட்டார்சைக்கிளோட்டிக்கு நாடித் துடிப்பு இல்லை என்று அறிந்ததும், அவசர மருத்துவ வாகனம் வரும்வரை திருவாட்டி லொங்-யாமும் மற்றொரு வழிப்போக்கரான ஆஷ்லீ லியூவும் இதய மீட்பு சிகிச்சையைச் செய்தனர்.
இதற்கிடையே, முன்னால் இருந்த சிறுபேருந்து ஓட்டுநர் திடீரென வாகனத்தை நிறுத்தியதும், தமது வாகனத்தையும் நிறுத்தியதாக லாரி ஓட்டுநர் கூறியதாக, சம்பவ இடத்தில் இருந்த திருவாட்டி சாண்ட்ரா ஃபௌஸ்தினா, 32, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அதன் காரணமாக, பின்னால் இருந்த மோட்டார்சைக்கிள் லாரியை மோதியதாகக் கூறப்படுகிறது.