ராஃபிள்ஸ் அவென்யூ, ஸ்டாம்ஃபர்ட் சாலைச் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ஒரு காரும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து காலை 11.20 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மோட்டார்சைக்கிளை ஓட்டிய 37 வயது ஆடவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டுசெல்லப்பட்டார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காயம் விளைவித்ததாக காரை ஓட்டிய 37 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று, SG Road Vigilante ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
மோட்டார்சைக்கிள் சாலைச் சந்திப்பை எட்டியவுடன், இடது புறத்திலிருந்து வந்த கார் ஒன்று திடீரென அதன்மீது மோதியதில் மோட்டார்சைக்கிளோட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.

