சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த மோட்டார்சைக்கிளோட்டி விபத்தில் மரணம்

இரண்டாம் பாலத்தில் செவ்வாய்க்கிழமை விபத்து

சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த மோட்டார்சைக்கிளோட்டி விபத்தில் மரணம்

1 mins read
4def092a-3d47-4875-a79a-a6c7bad659a1
இரண்டாம் பாலத்தில் சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிளோட்டி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) லாரியின் பின்புறத்தில் அதனை மோதினார். - சித்திரிப்புப் படம்: அன்ஸ்ப்ளா‌‌ஷ்
Google News Preferred Icon

இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் இரண்டாம் பாலத்தின் வழியாகச் சிங்கப்பூருக்கு வந்தபோது ஏற்பட்ட விபத்தில் 31 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.

சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) பிற்பகல் மணி 2.40 வாக்கில் விபத்து நேர்ந்தது என்று இஸ்கந்தர் புத்ரி வட்டாரக் காவல்துறைத் துணை ஆணையர் எம். குமரேசன் கூறினார். மோட்டார்சைக்கிளோட்டியின் 29 வயது மனைவி பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.

“போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அப்போது வாகனங்கள் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தன,” என்று துணை ஆணையர் குமரேசன் கூறினார்.

“மோட்டார்சைக்கிளோட்டி, கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தை லாரியின் பின்புறத்தில் மோதினார்,” என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

மோட்டார்சைக்கிளோட்டிக்குத் தலையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் மாண்டதாகவும் துணை ஆணையர் குமரேசன் தெரிவித்தார். அவரின் மனைவிக்குத் தலையிலும் இடக்கையிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர் சிகிச்சைக்காகச் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

விபத்துக் குறித்த விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்