மலேசியாவுக்குச் செல்லும் மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுடன் செல்பவர்களும் ஆகஸ்ட் 15 முதல், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
இரண்டு சோதனைச்சாவடிகளிலும் மோட்டார்சைக்கிள்களுக்கான தடங்களைப் பயன்படுத்தும் மிதிவண்டி ஓட்டுநர்களும் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தி சிங்கப்பூரிலிருந்து வெளியேறலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
கடப்பிதழ் அற்ற குடிநுழைவு அனுபவத்தைப் பயணிகளுக்கு வழங்கும் ஆணையத்தின் திட்டத்தின் ஒரு பகுதி அது.
மலேசியாவுக்கு காரில் செல்வோர், கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுடன் செல்பவர்களும் ஆகஸ்ட் 15 முதல், குடிநுழைவைக் கடந்துசெல்ல இரண்டு கடப்பிதழ்களை வருடுவதற்குப் பதிலாக, குழு அடிப்படையிலான ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
காரில் பயணம் செய்வோருக்கு, ஒரே வாகனத்தில் பத்துப் பேர் வரை ஒரு ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவைக் கடந்து செல்லலாம்.
மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கான அதன் ‘பயோமெட்ரிக்’ அடையாள முறையும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
‘பயோமெட்ரிக்’ அடையாள முறையாலும், ‘கியூஆர்’ குறியீட்டு முறையாலும், மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கும் அவர்களுடன் செல்பவர்களுக்கும் குடிநுழைவைக் கடந்து செல்லும் நேரம் கிட்டத்தட்ட 30 விழுக்காடு குறையும் என்று ஆணையம் சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
“கடப்பிதழைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘கியூஆர்’ குறியீட்டை வருடுவதால், மழையில் கடப்பிதழ்கள் நனைவதையும் தவிர்க்கலாம்,” என்று ஆணையம் கூறியது.
‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்த விரும்பும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள், ‘MyICA Mobile’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ‘கியூஆர்’ குறியீட்டை உருவாக்க, அவர்கள் சிங்பாஸ் வழியாக தங்கள் விவரங்களை நிரப்பலாம்.
இருப்பினும், அவர்கள் கட்டாயமாகத் தங்கள் கடப்பிதழ்களைக் கொண்டுசெல்ல வேண்டும். தங்கள் விவரங்களை உறுதிப்படுத்த சோதனைச்சாவடி அதிகாரிகள் கடப்பிதழ்களைக் காட்டும்படி அவர்களைக் கேட்கலாம்.
அதோடு, ஜோகூர் பாருவில் உள்ள மலேசியச் சோதனைச்சாவடியிலும் அவர்கள் கடப்பிதழ்களைக் காண்பிக்க வேண்டும்.