நடைபாதைகளில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும்.
இருப்பினும், மார்சிலிங் உணவு நிலையம், சந்தைக்கு வெளியே உள்ள நடைபாதையில் செல்லும் மோட்டார் சைக்கிள்களால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
வாகன நிறுத்துவதற்கான கட்டணத்தைச் செலுத்தாதிருக்க சில மோட்டார் சைக்கிளோட்டிகள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நடைபாதையில் ஓட்டி, அவ்வழியாக வாகன நிறுத்துமிடத்துக்குள் நுழைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோக் 20 மார்சிலிங் லேனின் இவ்வாறு நடப்பதைக் காட்டும் காணொளி மார்ச் 10ல் ஸ்டோம்ப் இணையப்பக்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த மோட்டார் சைக்கிளோட்டிகளின் பொறுப்பற்ற செயலால் மூத்தோருக்கும் அவ்வழியாகச் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து ஏற்படுவதாக காணொளியைப் பகிர்ந்துகொண்ட ஃபிரெங்கி என்பவர் தெரிவித்தார்.
இது குறித்த விவரங்களைப் பற்றி அறிந்துகொள்ள நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் ஸ்டோம்ப் தொடர்புகொண்டது.
“மார்சிலிங் லேன் சந்தைக்கு வெளியே உள்ள நடைபாதையில் நிலப் போக்குவரத்து ஆணையம் அமலாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அமலாக்கப் பணிகள் தொடரும்,” என்று ஆணையம் தெரிவித்தது.
“நடைபாதைகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $2,000 அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று ஆணையம் கூறியது.

