மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) எதிராகச் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்குகிறார் ஜெர்மி டான். மசெக சார்பில் திருவாட்டி கோ ஸி கீ, 46, போட்டியிடுகிறார்.
“திரு டான் கடுமையான போட்டியைத் தருவார் என்று நம்புகிறேன். மக்கள் மனதையும் குடியிருப்பாளர்களின் அன்பையும் வெல்ல வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன்,” என்று திருவாட்டி கோ தமது தொகுதி உலாவின்போது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“திரு டானின் அனைத்துக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் நல்ல மனிதர், நட்பானவர்,” என்ற திருவாட்டி கோ, அவருக்கு எதிராக கடுமையான போட்டியை எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
“முன்பெல்லாம் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் நேரில் பார்த்தால் காரசாரமாகப் பேசுவார்கள், ஆனால் இப்போது அப்படி இல்லை,” என்று திருவாட்டி கோ செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) இரு வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தது. அப்போது இருவரும் நட்பு ரீதியாக வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
கடந்த வாரம் நடந்த வேட்புமனு தாக்கலின்போது இரு வேட்பாளர்களும் சிறிது நேரம் பேசினர்.
திருவாட்டி கோ, பொதுத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார். அவர் கப்பல்துறைக்கான வழக்கறிஞர். நான்கு முறை மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் வெற்றிபெற்ற மசெகவின் லிம் பியாவ் சுவான் இம்முறை போட்டியிடவில்லை.
34 வயது டானுக்கும் இது முதல் பொதுத் தேர்தல். இத்தேர்தலில் வெற்றிபெற்றால் தாம் முழுநேர நாடாளுமன்ற உறுப்பினராகப் போவதாக திரு டான் வாக்குறுதி வழங்கியுள்ளார்.