மவுண்ட்பேட்டன் தனித்தொகுதிக்குத் திடீரென அனுப்பப்படவில்லை: மசெக உறுப்பினர் கோ ஸி கீ

2 mins read
bf170ab1-b2b7-4482-a247-a9adae8422ea
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சியின் கோ ஸி கீ (வலது) மக்களைச் சந்தித்துப் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் போட்டியிடவிருக்கும் மக்கள் செயல் கட்சியின் திருவாட்டி கோ ஸி கீ தம்மைக் குறித்து சீர்திருத்த மக்கள் கூட்டணியின் திரு லிம் தியென் கூறிய கருத்தை நிராகரித்துள்ளார்.

திரு லிம் கூறியதைப் போல மவுண்ட்பேட்டன் வட்டாரத்துக்குத் தாம் திடீரென கொண்டுவரப்படவில்லை என்றும் கடந்த 10 மாதங்களாக அங்குத் தொகுதி உலா மேற்கொண்டிருப்பதாகவும் திருவாட்டி கோ தெரிவித்தார்.

“ஃபேஸ்புக் படங்கள் பொய் சொல்லாது,” என்ற திருவாட்டி கோ, மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு லிம் பியாவ் சுவானின் ஃபேஸ்புக் பதிவுகளில் கடந்த 10 மாதங்களாகத் தொகுதி உலா சென்ற படங்கள் இருக்கின்றன என்றார்.

திரு லிம், ஏறக்குறைய 20 ஆண்டுகள் மவுண்ட்பேட்டனில் சேவையாற்றி தற்போது ஓய்வுபெறுவதாகக் கூறினார்.

கடல்துறை வழக்கறிஞரான திருவாட்டி கோ, “சொல்லப்போனால் நான் ஜூலை 2024ல் தொடங்கினேன், ஒருவேளை திரு லிம் தியென் அப்போதிலிருந்து இந்த வட்டாரத்தில் நான் செயலாற்றிவந்திருப்பதைக் கவனித்திருக்கமாட்டார்,” என்றார்.

தாம் நிச்சயமாகத் திடீரென மவுண்ட்பேட்டன் தொகுதிக்கு அனுப்பப்படவில்லை என்ற அவர், புக்கிட் தீமா வட்டாரத்தில் கடந்த 13 ஆண்டுகள் இருந்ததைக் குறிப்பிட்டார்

46 வயது திருவாட்டி கோ, மக்கள் செயல் கட்சி ஆர்வலராக 2012ஆம் ஆண்டிலிருந்து சேவையாற்றுகிறார். 2020ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து அவர் புக்கிட் தீமா கிளைச் செயலாளராகவும் இருந்துவருகிறார்.

சீர்திருத்த மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலாளர் திரு லிம் தியென், ஏப்ரல் 20ஆம் தேதி ஜாலான் பாத்து சந்தை, உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா சென்றபோது திருவாட்டி கோ அங்குத் தெரியாத நபர் என்றார்.

அவர் கடைசி நிமிடத்தில் மவுண்ட்பேட்டனுக்கு அனுப்பட்டார் என்றும் அந்த வட்டாரத்தில் நிலைமை அவருக்குத் தெரியாது என்றும் திரு லிம் சொன்னார்.

மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் சீர்திருத்த மக்கள் கூட்டணி வேட்பாளரைக் களமிறக்கத் திட்டமிடுகிறது.

குறிப்புச் சொற்கள்