ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் விலங்கைப் பார்த்துப் பெற்றோருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள கால்வாயிலிருந்து நவம்பர் பன்னிரண்டாம் தேதி சருகுமான் ஒன்று மீட்கப்பட்டது.
அன்று காலை ஏறத்தாழ எட்டு மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக தேசியப் பூங்காக் கழகம் கூறியது. அன்று காலையிலேயே அந்த விலங்கைப் பாதுகாப்பாக மீட்டு, பரிசோதனைக்காக மண்டாய் வனவிலங்கு நிலையத்திற்குக் கொண்டு சென்றதாகக் கழகம் தெரிவித்தது.
அந்தச் சருகுமான் நலமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அன்றே ‘செஸ்ட்நட் இயற்கைப் பூங்காவில்’ விடப்பட்டதாக கழகத்தின் வனவிலங்கு நிர்வாகப் பிரிவுக் குழும இயக்குநர் ஹாவ் சூன் பெங் கூறினார்.
ஜேன் டாங், தமது கணவருடன் தங்கள் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது வெள்ளநீர் வடிகாலில் அந்த விலங்கைப் பார்த்தனர்.
மகனைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பிய அவர்கள் கழகத்தைத் தொடர்புகொண்டனர். மீட்புக் குழுவினர் வரும்வரை இரு காகங்கள் அந்த மானைத் தாக்கியதாகவும், இணையர் சத்தமிட்டு அவற்றை விரட்டியதாகவும் திருவாட்டி டாங் கூறினார். மடிக்கணினி அளவிலிருந்த அச்சருகுமான் பயந்திருந்ததோடு, காகங்களைத் தவிர்க்கச் சுருண்டு கிடந்தது.
காலை 8.40 மணியளவில் வந்த இரு என்பார்க்ஸ் மீட்பாளர்கள், 30 நிமிட முயற்சிக்குப் பிறகு வலைமூலம் மானைப் பிடித்தனர். அப்பகுதியில் இதற்குமுன் மானைப் பார்த்ததில்லை என்றும், மழைக்குப் பிறகு உடும்புகளே அதிகம் காணப்படும் என்றும் திருவாட்டி டாங் சுட்டினார்.
வனவிலங்குகளைப் பொதுமக்கள் தாங்களாகவே கையாள வேண்டாம் என்றும், அவசர உதவிக்கு 1800-476-1600 எனும் 24 மணி நேர விலங்கு மீட்புத் தொடர்பு எண்ணை அழைக்குமாறும் கழகம் நினைவூட்டியது.
