ஜோகூரில் வர்த்தகம் செய்ய உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை

ஜோகூரில் வர்த்தகம் செய்ய உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை

2 mins read
eb6709cb-2370-4d70-ac0d-ce4e783354d7
மேபேங்க் சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி ஆல்வின் லீ (வலது), சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ஆங் யுவிட் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டனர். - படம்: மேபேங்க்

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் அவற்றின் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் சிங்கப்பூரைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மேபேங்க் சிங்கப்பூர் வங்கி வியாழக்கிழமை (பிப்ரவரி 27) ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்துடன் மேபேங்க் சிங்கப்பூர் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.

ஜோகூர் வர்த்தகச் சந்தைக்குள் நுழைய, வங்கிக் கணக்குகளை விரைவாகத் திறக்க, கல்வி வளங்களுடன் பயிற்சி மற்றும் ஆலோசனைச் சேவை பெற சிறு நிறுவனங்களுக்கு மேபேங்க் ஆதரவு வழங்கும்.

சொத்துகள் அடிப்படையில் மேபேங்க் வங்கி, தென்கிழக்காசியாவிலேயே நான்காவது ஆகப் பெரியது.

மலேசியாவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் (S$6.04 மில்லியன்) வரையிலான கடனை மேபேங்க் ‘கிரீன் லேன் ஃபைனேன்சிங்’ திட்டம் மூலம் விரைவாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜோகூரில் வர்த்தகம் செய்வது தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த பல சிறிய, நடுத்தர நிறுவனங்கள் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அவை முன்வைத்துள்ள கேள்விகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ல் 250 விழுக்காடு அதிகம் என்று மேபேங்க் சிங்கப்பூர் கூறியது.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் 2023 அக்டோபரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வர்த்தகம் செய்யும்போது நிறுவனங்களுக்குச் செலவினம் அதிகமாக இருப்பதாக மேபேங்க் சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி ஆல்வின் லீ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், தொடக்கத்திலிருந்து பெரிய நிறுவனங்களுக்குப் பலனைத் தரும். இந்தப் பெரிய நிறுவனங்களுக்கு ஜோகூரில் ஆலைகளை நிறுவ பணபலம் உள்ளது. வரி சலுகைகளும் அவற்றுக்குச் சாதகமாக இருக்கும்.

“ஜோகூரில் தொழில் செய்வதற்குத் தேவையான புரிதலும் பணமும் சிங்கப்பூரைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் போதுமான அளவில் இருக்கும் சாத்தியம் குறைவு. அவற்றுக்கு மேபேங்க் மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கம் போன்ற அமைப்புகளால் உதவ முடியும்,” என்று திரு லீ தெரிவித்தார்.

சிங்கப்பூர் வர்த்தகங்களில் 99 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்களாகும்.

அவற்றில் 20 விழுக்காடு நிறுவனங்கள் மேபேங்க் வங்கியின் வாடிக்கையாளர்கள் என்றார் திரு லீ.

குறிப்புச் சொற்கள்