புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவாவுடனான மக்கள் சந்திப்புக் கூட்டம் திங்கட்கிழமை இரவு வழக்கம்போல் தொடர்ந்தது.
தமது மூக்கில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொள்ளப்போவதாகத் திரு லியாங் அறிவித்த ஐந்து நாள்களுக்குப் பிறகு மக்கள் சந்திப்புக் கூட்டம் இடம்பெற்றது.
இரவு எட்டு மணிக்குள் குறைந்தது 15 குடியிருப்பாளர்கள், புளோக் 110, கங்சா ரோட்டில் உள்ள மக்கள் செயல் கட்சியின் புக்கிட் பாஞ்சாங் கிளை அலுவலகத்தைச் சென்றடைந்தனர். சிலர் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
திரு லியாங், 59, தமக்கு மூக்கில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும் அடுத்த ஏழு வாரங்களுக்கு நாள்தோறும் கதிரியக்க சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக் பதிவு வழியாகத் தெரிவித்திருந்தார்.
சில மாதங்களாகவே இடது காதில் சரியாகக் கேட்க முடியாததால், காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிகிச்சை செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளதாகவும் ஆயினும் குடியிருப்பாளர்களுடன் தமது வாராந்திரக் கூட்டங்களைத் தொடர முடியும் எனத் தான் நம்புவதாகவும் திங்கட்கிழமையன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் கூறினார்.