கடல்துறை, துறைமுக ஆணையம் 2025ஆம் ஆண்டிலிருந்து சில பகுதிகளில் மின் துறைமுகக் கப்பல்களுக்கான மின்னேற்ற நிலையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மின்னேற்ற உள்கட்டமைப்பு கட்டங்கட்டமாக ஜூரோங் துறைமுகம், மரினா சவுத் பியர், பாசிர் பாஞ்சாங் படகு முனையம், பிஎஸ்ஏ மரின் - வெஸ்ட் கோஸ்ட் தளம், செபாரொக் முனையம் ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆர்வம் உள்ளவர்கள் தற்போது உரிமம் வைத்திருப்பவர்களுடனும் பட்டியலிடப்பட்ட இடங்களின் நடத்துநர்களுடனும் இணைந்து செயல்பட்டு, அந்த மின்னேற்ற நிலையங்களை உருவாக்கி, பராமரித்துச் செயல்படுத்தவேண்டும் என்று ஆணையம் கூறியது.
தேர்ந்தெடுக்கப்படும் முன்மொழிவுகள் முன்னோட்டத் திட்டமாக ஈராண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கான தெரிவும் வழங்கப்படும்.
கிடைக்கப்பெறும் அனுபவம், மின் துறைமுகக் கப்பலுக்கான மின்னேற்ற உள்கட்டமைப்பு, மின்னேற்ற உள்கட்டமைப்புக்கான பெருந்திட்டம், இங்கு அத்தகைய செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் திட்டங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்குப் பங்களிக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.
2030ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் துறைமுகத்தில் செயல்படும் அனைத்து துறைமுகக் கப்பல்களும் முற்றிலும் மின்சாரத்தில் இயங்க வேண்டும் அல்லது பி100 எரிபொருளைப் பயன்படுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும் அல்லது ஹைட்ரஜன் போன்ற எரிபொருளுக்கு ஏற்புடையவையாக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியது.
ஆர்வம் உள்ளவர்கள் மேல்விவரங்களுக்கு ஆணையத்தின் இணையத்தளத்தை நாடலாம் அல்லது தங்களின் முன்மொழிவுகளை அக்டோபர் 6ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.

