சிங்கப்பூர் விவகாரங்களைக் கலந்துரையாட ‘சிறப்பு குழு’ அமைத்த என்எம்பி நியோ

சிங்கப்பூர் விவகாரங்களைக் கலந்துரையாட ‘சிறப்பு குழு’ அமைத்த என்எம்பி நியோ

2 mins read
bad86d61-431d-421e-a529-c771bada5e67
நாடாளுமன்ற நியமன உறுப்பினர் நியோ கொக் பெங் சிறப்புக் குழுவுடன் நாடாளுமன்றம் சென்றார். - படம்: டாக்டர் நியோ கொக் பெங்

சிங்கப்பூரின் பொருளியலிலும் சமூகத்திலும் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முதல் தவணைக் கால நாடாளுமன்ற நியமன உறுப்பினர் நியோ கொக் பெங் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

19லிருந்து 70க்கும் அதிகமான வயதுடைய 30 தனிநபர்கள் குழுவில் உள்ளனர்.

ஜனவரியில் நாடாளுமன்ற நியமன உறுப்பினராகப் பொறுப்பேற்றதை அடுத்து சிறப்புக் குழுவை அமைத்ததாக டாக்டர் நியோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டிடம் தெரிவித்தார்.

அந்தக் குழு அதன் முதல் கூட்டத்தை வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் பிப்ரவரியில் இணையம்வழி சந்தித்தது.

“பல பின்னணியைச் சேர்ந்தோருடன் கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கிறது. கொள்கைகளை வடிவமைப்பதில் பல சிங்கப்பூரர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்,” என்றார் டாக்டர் நியோ.

பிப்ரவரி 21ஆம் தேதி வெளிப்படையாகத் தமது சிறப்புக் குழு பற்றி லிங்க்ட்இன் மூலம் அறிவித்த டாக்டர் நியோ, நாடாளுமன்றத்திற்குத் தமது குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

சிறப்புக் குழுவில் உள்ளோர் தொண்டூழியர்கள் என்றும் தங்கள் அனுபவம், நிபுணத்துவம் மூலம் சிங்கப்பூருக்குப் பங்களிக்க விரும்புகின்றனர் என்றும் டாக்டர் நியோ சுட்டினார்.

சிறப்புக் குழு கலந்துரையாடும் விவகாரங்களைத் தொகுக்க மூன்று சட்டபூர்வ இணைப் பயிற்சி மாணவர்கள் உள்ளதையும் டாக்டர் நியோ குறிப்பிட்டார். அவர்கள் லீ குவான் இயூ பொதுக் கொள்கைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்வர்.

பிப்ரவரி 26ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 6ஆம் தேதி வரை இடம்பெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது வெவ்வேறு அமைச்சுகள் முன்வைத்த விவகாரங்கள் பற்றி கூறும்படி டாக்டர் நியோ சிறப்புக் குழுவிடம் கூறியுள்ளார்.

சிறப்புக் குழு, வளர்ப்புப் பெற்றோருக்கான பற்றாக்குறை குறித்து முன்வைத்தது. வளர்ப்புப் பெற்றோராக இருந்த டாக்டர் நியோ, நாடாளுமன்றத்தில் அதுகுறித்த கவலைகளை முன்வைத்தார்.

பிற நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களும் பல்வேறு வகைகளில் உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து நாடாளுமன்றத்தில் கருத்துகளை முன்வைப்பர்.

தேசியப் பல்கலைக்கழக மருந்தகங்களில் குடும்பநல மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ஹரீ‌ஷ் சிங்கராஜூ, தாம் நேரில் கண்டறியும் தகவல்களைத் திரட்டுவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்