நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத் தொகுதியைப் பாட்டாளிக் கட்சி தக்கவைத்துக்கொண்டது. அக்கட்சி 59.68 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வென்றது.
இதையடுத்து, அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட பிரிவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவலைப் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்கட்கிழமை (மே 5) அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட யூனோஸ் பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் திரு சிங் தொடர்ந்து செயல்படுவார்.
பாட்டாளிக் கட்சியின் தலைவரான சில்வியா லிம் பாய லேபார் பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வார்.
பிடோக் ரெசவோர்-பொங்கோல் பிரிவுக்கு ஜெரால்ட் கியாம் தொடர்ந்து தலைமை தாங்குவார்.
சிராங்கூன் பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினராக கென்னத் தியோங் செயல்படுவார்.
2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அப்பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் பாட்டாளிக் கட்சியின் லியோன் பெரேரா செயல்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினர் நிக்கோல் சியாவுடன் அவர் கள்ள உறவு கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இருவரும் கட்சியிலிருந்து விலகினர்.
ஃபைசல் மனாப்புக்குப் பதிலாக காக்கி புக்கிட் பிரிவுக்கு ஃபாட்லி ஃபவ்ஸி தலைமை தாங்குவார்.
2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஃபைசல் மனாப் தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிட்டார்.
அவர் தலைமை தாங்கிய பாட்டாளிக் கட்சிக் குழு 47.37 விழுக்காடு வாக்குகளைப் பெற்று நூலிழையில் தோற்றது.
இந்நிலையில், தமது யூனோஸ் பிரிவு குடியிருப்பாளர்களுக்கான மக்கள் சந்திப்புக் கூட்டம், திங்கட்கிழமை (மே 5) இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை புளோக் 615 பிடோக் ரெசவோர் சாலையில் நடைபெறும் என்று திரு பிரித்தம் சிங் தெரிவித்தார்.

