தீவு விரைவுச்சாலையில் டொயோட்டா வெல்ஃபயர் ரக கார் ஒன்று சாலைத்தடுப்பின்மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்தது.
தீவு விரைவுச்சாலையில், சீமெய் ரோடு வெளிவழிக்கு அருகே நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
கார்மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தான் நான்கு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டேன் என்றும் ஏழு இருக்கைகள் கொண்ட அந்தச் சொகுசு கார் முற்றிலுமாகத் தீயில் எரிந்து நாசமானது என்றும் அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ‘ஸ்டோம்ப்’ செய்தி இணையத்தளத்திடம் கூறினார்.
விபத்தில் காயமடைந்த சொகுசு காரின் ஓட்டுநர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காரில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.