சட்ட ஆண்டுத் தொடக்க விழாவில் திரு. டேனி ஓங்கை மூத்த வழக்கறிஞராக நியமிப்பதாகத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் முன்னணி வழக்கறிஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ‘மூத்த வழக்கறிஞர்’ தகுதி வழங்கும் திட்டத்தின்கீழ் இந்த நியமனம் இடம்பெறுகிறது. இத்திட்டம் நடப்பிற்கு வந்து இந்த ஆண்டுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
சிறந்த சட்டத் திறமை, விரிவான சட்ட அறிவு, மிக உயர்ந்த தொழில்முறை நேர்மை ஆகியவற்றைக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமே ‘மூத்த வழக்கறிஞர்’ நியமனமாகும்.
கூடுதலாக, அவர்கள் சட்டம், சட்டச் சமூகம், ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும்.
திரு டேனி ஓங், 50, இத்திட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட 101வது மூத்த வழக்கறிஞர் ஆவார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர், சிக்கலான எல்லை கடந்த நிதி, வணிகத் தகராறுகள், நிதி ஒழுங்குமுறை, நிதி சார்ந்த குற்றப் புலனாய்வுகள், அனைத்துலக மறுசீரமைப்பு, நொடித்துப்போதல் விவகாரங்களில் முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்து வருகிறார்.
திரு டேனி, சிங்கப்பூர் வணிகச் சட்டத்தின் வளர்ச்சியில், குறிப்பாக வளர்ந்து வரும் சிக்கலான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியுள்ளார்.
பிளாக்செயின், மின்னிலக்கச் சொத்துக்கள் தொடர்பான தகராறுகளைக் கையாள்வதில் முன்னோடியான அவர், சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது கிரிப்டோகரன்சி வழக்கை வெற்றிகரமாக முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர்.
வழக்கறிஞர் தொழில் சட்டத்தின் பிரிவு 30ன்கீழ், ஒரு தேர்வுக் குழுவின் மூலமாகவே மூத்த வழக்கறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

