இளம் வழக்கறிஞர்களின் கல்வி முறையில் ஒரு பெரும் மாற்றம் தேவை: தலைமை நீதிபதி

2 mins read
e31dc81d-0fb2-4fcc-82d4-c0ea49b478b6
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். - படம்: சாவ்பாவ்

இளம் வழக்கறிஞர்கள் சட்ட ஆராய்ச்சி, பகுப்பாய்வு போன்ற அடிப்படைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அதிக அளவில் இடமாற்றம் செய்வதால், இந்தத் திறன்கள் சீரழிந்து போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஏஐ-உருவாக்கிய தயாரிப்பு சரியானதா என்பதைச் சரிபார்க்கும் வழக்கறிஞரின் திறனைப் பாதிக்கும் அளவிற்கு கூட இது அமையலாம்.

திங்கட்கிழமை (12 ஜனவரி) உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற சட்ட ஆண்டின் தொடக்கவிழாவில் இவ்வாறு உரையாற்றிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், இந்த ஆண்டு, சிங்கப்பூர் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இருநூறாவது ஆண்டு என்பதை ஒட்டிப் பேசினார்.

சிங்கப்பூர் நீதித்துறையின் பேரளவிலான வளர்ச்சியையும் நாட்டின் முன்னேற்றத்தில் நீதித் துறை ஆற்றிவரும் நிலையான பங்கையும் கௌரவிக்கும் வகையில் தொடர்ச்சியான பல புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

மேலும், இருநூறாவது ஆண்டுநிறைவுச் சின்னத்தையும் ஒரு நினைவுப் பதக்கத்தையும் அவர் வெளியிட்டார்.

“இதன் ஒரு முக்கிய அங்கமாக ஒரு நினைவுச் சிறப்புப் புத்தகம் வெளியிடப்படுகிறது. மேலும், இளையர்கள், மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தினரிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக இதனை நாங்கள் கொண்டுசேர்ப்போம்,” என்றார் திரு சுந்தரேஷ் மேனன்.

இந்த ஆண்டு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று கூறிய அவர், நீதித்துறை வளாகம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சட்டத் துறையின் எதிர்காலம்

புதிய வழக்கறிஞர்களின் கல்வி, பயிற்சி முறையிலும், தொடர் சட்டக் கல்வியிலும் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி, தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்திற்கு ஏற்ப இளம் வழக்கறிஞர்களின் கல்வி முறையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்டத் துறையில் இருப்பவர்கள் தொடர் கல்வி மேற்கொள்ளும்போது அவர்களுக்குத் தேவையான திட்டங்களைத் தொகுத்து வழங்க வேண்டுமென்றும் அவர் சொன்னார்.

செயற்கை நுண்ணறிவின் சாத்தியமான தாக்கங்களை அடையாளம் காண வேண்டுமென்ற அவர், இளம் வழக்கறிஞர்களின் மனநலனையும் கருத்தில் கொள்ள வேண்டுமென்றார்.

சிங்கப்பூருக்கு அப்பால் இதர நாடுகளில் வாய்ப்புகள் தேடுவது குறித்தும் திரு சுந்தரேஷ் மேனன் பேசினார்.

குறிப்புச் சொற்கள்