முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் 15வது நாடாளுமன்றத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி காணப்பட்டார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளரான அவர், மன்ற நாயகரின் அழைப்பை ஏற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றதாக ஃபேஸ்புக்கில் கூறினார்.
மன்ற நாயகராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்ட திரு சியா கியன் பெங்குடன் திரு லியோங் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டார்.
மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அவைத் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா, மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெஃப்ரி சியாவ் ஆகியோருடனும் திரு லியோங் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சிங்கப்பூரின் 14வது நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக திரு லியோங் 2020, ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து 2025, ஏப்ரல் 15ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை சேவையாற்றினார்.
திரு மன் வாயும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான திருவாட்டி ஹேசல் புவாவும் 14வது நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
“கடந்துவந்த பயணத்தைத் திரும்பி பார்க்கும்போது, வேலைப் பாதுகாப்பு, கழக வீடுகள், வாழ்க்கைச் செலவினம், உணவங்காடிக் கலாசாரம் ஆகிய நாட்டின் முக்கிய விவகாரங்களில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை எண்ணி பெருமிதம்கொள்கிறேன்,” என்று திரு லியோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அதன் புதுப்பிப்பு உத்தியில் கவனம் செலுத்தப்போவதாகவும் திரு லியோங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மக்களின் நம்பிக்கையை எவ்வாறு கூடுதலாகப் பெற முடியும் என்பதை மறுஆய்வு செய்ய இவ்வாண்டு நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைக் கட்சி தீர ஆராய்வதாக அவர் கூறினார்.
“எங்கள் உத்திகளையும் எப்படி செயல்படுகிறோம் என்பதையும் மறுஆய்வு செய்ய வேண்டும். இன்னொரு நாள் போராட நாங்கள் எங்கள் அணியை மாற்றியமைக்கவேண்டி வரலாம்,” என்றார் திரு லியோங்.
15வது நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா எம்பிக்களான பாட்டாளிக் கட்சியின் திருவாட்டி இலீன் சோங்கையும் திரு ஆன்ட்ரே லோவையும் வரவேற்பதாகவும் திரு லியோங் குறிப்பிட்டார்.

