லாவோஸ் புதிய பிரதமருக்கு திரு வோங் வாழ்த்து; சிங்கப்பூருக்கு வர அழைப்பு

லாவோஸ் புதிய பிரதமருக்கு திரு வோங் வாழ்த்து; சிங்கப்பூருக்கு வர அழைப்பு

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

08 Oct 2026 - 9:38 am

2 mins read

லாவோஸின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சலேம்சே கொம்மாசித்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற வாக்கெடுப்பில் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்று லாவோஸ் அரசாங்கச் செய்தி நிறுவனமான கேபிஎல் தெரிவித்தது.

ஆளும் லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான 57 வயது சலேம்சே, இதற்கு முன்னர் துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான லாவோஸ் தூதுக்குழுவிலும் பணியாற்றியுள்ள இவர், ஆங்கிலத்துடன் ரஷ்ய, பிரெஞ்சு மொழிகளிலும் பேசக்கூடியவர்.

திரு சலேம்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்து பிரதமர் வோங் அனுப்பிய செய்தியில், “லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் பிரதமராகத் தாங்கள் நியமிக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆகச் சிறந்த, அணுக்கமான உறவுகளைக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளதையும் சுட்டினார்.

இதில் லாவோஸ்-தாய்லாந்து-மலேசியா-சிங்கப்பூர் இடையிலான மின்சக்தி ஒருங்கிணைப்புத் திட்டம், கார்பன் வர்த்தகம் ஆகியவற்றுடன் எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் போன்ற இருதரப்புக்கும் நன்மை அளிக்கும் முயற்சிகள் அடங்கும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு லாவோசுடனான மேம்பாட்டு ஒத்துழைப்பின் 25வது ஆண்டைக் குறிக்கிறது. லாவோசின் மேம்பாட்டு முன்னுரிமைகளுக்கு ஏற்ப இந்த நட்புறவை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளுமாறு திரு சலேம்சேவுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், “நமது இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்ல உங்களுடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றக் காத்திருக்கிறேன்,” என்று தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
லாவோஸ்லாரன்ஸ் வோங்பயணம்