மகாதேவி பாலசுந்தரத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மகாதேவி பாலசுந்தரத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2 mins read
186a22df-24ab-446b-8678-1865b87b72e2
செயின்ட் ஹில்டாஸ் தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் 68 வயது மகாதேவி பாலசுந்தரத்திற்கு இவ்வாண்டின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 2
Google News Preferred Icon

உயர்நிலைப்பள்ளி ஆசிரியரான தந்தை, இல்லத்திலிருந்தவாறே மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகள் நடத்திய தாய் இருவரும் விதைத்த தமிழ்ப்பற்று, திருமதி மகாதேவி பாலசுந்தரத்தின் 42 ஆண்டுக்காலத் தொய்வில்லாத கல்விச் சேவைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

அப்போது தொடங்கிய அவரது ஆசிரியர் பணி, மொழிப்பற்றை மாணவர்களிடத்தில் விதைக்கும் நோக்குடன் இன்றும் தொடர்கிறது.

அவரது அர்ப்பணிப்பையும் நீண்டகாலச் சேவையையும் அங்கீகரிக்கும் வகையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற ‘நல்லாசிரியர் விருது 2026’ விழாவில் திருமதி பாலாவிற்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

செயின்ட் ஹில்டாஸ் தொடக்கப்பள்ளியில் மூத்த ஆசிரியராகப் பணியாற்றும் இவர், தமது 42 ஆண்டுகாலச் சேவையில் தமிழ்க் கற்றலை அர்த்தமுள்ளதாகவும் காலத்திற்கேற்றதாகவும் மாற்றத் தொடர்ந்து முயன்று வருகிறார்.

காலத்திற்கேற்ப புதுப்பிக்கும் முயற்சிகள்

தொழில்நுட்பத்தைத் தமிழ் கற்பித்தலுக்குப் பயனுள்ள வகையில் வடிவமைத்த முன்னோடிகளில் திருமதி பாலாவும் ஒருவர்.

செயின்ட் ஹில்டாஸ் தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் 68 வயது மகாதேவி பாலசுந்தரத்திற்கு இவ்வாண்டின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
செயின்ட் ஹில்டாஸ் தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் 68 வயது மகாதேவி பாலசுந்தரத்திற்கு இவ்வாண்டின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. - படம்: பே. கார்த்திகேயன்

கல்வி அமைச்சின் முன்னாள் அதிகாரியான மறைந்த திரு நா. கோவிந்தசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, 1997ஆம் ஆண்டிலேயே ‘தமிழ்நெட்97’ (TamilNet 97) அனைத்துலக இணைய மாநாட்டில் இணைய வளங்களைக் கொண்டு கற்பிப்பது பற்றி இவர் கட்டுரை படைத்தார்.

இந்த முயற்சியை அதிபர் தர்மன் சண்முகரத்தினம், திரு அருண் மகிழ்நன் போன்ற பெருமக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

‘2000ஆம் ஆண்டில் கணினிவழித் தமிழ்’ என்ற நூலையும் வெளியிட்ட இவர், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்.

தமது வகுப்பறையில் செயற்கை நுண்ணறிவைத் திறம்படப் பயன்படுத்துவதோடு, ‘Storybook Weaver’, ‘ThingLink’ போன்ற மின்னிலக்கக் கருவிகளின் பயன்பாடு குறித்துச் சக ஆசிரியர்களுக்கும் பயிலரங்குகளை இவர் நடத்தியுள்ளார்.

“இப்போது மாணவர்களுக்குத் தமிழ்க் கதைகளைச் சுவைபடச் சொல்ல ‘கூகல் ஜெமினை’ தளத்தைப் பயன்படுத்துகிறேன். சொற்களைக் கொடுத்து கதைகளை உருவாக்கி, அதை மின்னிலக்கக் கதைப் புத்தகங்களாக மாற்றி, ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்குப் படித்துக் காட்டுகிறேன். இதுவரை 72 புத்தகங்களை இவ்வாறு உருவாக்கியுள்ளேன்,” என்றார் அவர்.

மாற்றத்தோடு ஒட்டி ஒழுகும் ஆசிரியர்

தமது நீண்டகாலப் பணியில் மாணவர்களிடையே பெரும் மாற்றங்களைத் திருமதி பாலா கண்டுள்ளார்.

முற்காலத்தில் மாணவர்கள் தடையின்றிச் சரளமாகத் தமிழ் பேசிய நிலை மாறி, தமிழில் கேள்வி கேட்டால்கூட ஆங்கிலத்தில் பதிலளிக்கும் இன்றைய மாணவர்களின் குறைந்துவரும் தமிழ்மொழிப் பயன்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார்.

இம்மாற்றங்களைக் கண்டு அவர் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை. மாறாக, அதற்கேற்பத் தமது கற்பித்தல் முறைகளை நவீனப்படுத்தி வருகிறார்.

மாணவர்களைக் கட்டாயப்படுத்தாமல் விளையாட்டுகள், செயற்கை நுண்ணறிவுக் கதைகள் போன்ற ஈர்க்கக்கூடிய கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் தமிழை நோக்கி இவர் ஈர்க்கிறார்.

தமிழ்மொழிப் பாடத்தின்வழி பண்பியல்பு மற்றும் குடியுரிமைக் கல்விக்கான (CCE) விழுமியங்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் இவர், தற்காலத் தலைமுறைக்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

குறிப்புச் சொற்கள்