பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் முறையும் எம்ஆர்டி இடையூறுகளும் தனித்தனி விவகாரங்கள்: சீ ஹொங் டாட்

பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் முறையும் எம்ஆர்டி இடையூறுகளும் தனித்தனி விவகாரங்கள்: சீ ஹொங் டாட்

2 mins read
dd7a2bec-8a92-459c-b841-81329d133699
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் முறையில் எவ்விதத் தாக்கத்தையும் கொண்டிருக்கக் கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

“சேவைத் தரம் பூர்த்திசெய்யப்படுவதை உறுதிசெய்ய மற்ற நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன,” என்று ஆறு நாள்கள் கிழக்கு மேற்கு ரயில் பாதையில் சேவைகளைப் பாதித்த பேரளவிலான இடையூறு குறித்த அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் 25க்கும் 30ஆம் தேதிக்கும் இடையில், ஜூரோங் ஈஸ்ட்டுக்கும் புவன விஸ்தாவுக்கும் இடையே ரயில் சேவை இல்லை.

ரயில் ஒன்றால், 2.55 கிலோமீட்டர் நீளமான தண்டவாளத்துக்கும் தண்டவாளச் சாதனங்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டதே அதற்குக் காரணம்.

அதனால், ஏறக்குறைய 3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர். ரயில் சேவைகள் அக்டோபர் 1ஆம் தேதி வழக்கநிலைக்குத் திரும்பின.

பொதுப் போக்குவரத்து மன்றம் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான அதன் முடிவை மறுஆய்வு செய்யுமா என்று பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம் கேள்வி எழுப்பினார்.

டிசம்பர் 28ஆம் தேதிமுதல், பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் ஆறு விழுக்காடு அதிகரிக்கும். அட்டையைப் பயன்படுத்தும் பெரியோர், ஒவ்வொரு ரயில், பேருந்துப் பயணத்துக்கும் பத்துக் காசு கூடுதலாகச் செலுத்தவேண்டும்.

கட்டண மறுஆய்வை இடையூறுகளுடனும் சேவை நிலைகளுடனும் தொடர்புபடுத்துவது குறித்து முன்னதாக பொதுப் போக்குவரத்து மன்றம் யோசித்தபோதும், இறுதியில் அந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப்போவதில்லை என்று அது முடிவெடுத்ததாகத் திரு சீ கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

சேவைத் தரத்தைக் கட்டிக்காக்கும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த திரு சீ, இடையூறுகள் ஏற்படும்போது, நிலப் போக்குவரத்து ஆணையம் அதற்கான காரணத்தையும் அதற்குப் பொறுப்பாகும் தரப்பினரையும் உறுதிசெய்து, தேவைப்பட்டால் தண்டனைகளை விதிக்கும் என்று கூறினார்.

நம்பகத்தன்மை தொடர்பான இலக்குகளைப் பூர்த்திசெய்யாத பொதுப் போக்குவரத்து நடத்துநர்கள், அரசாங்க ஊக்கத்தொகை திட்டங்களின்கீழ் கொடுக்கப்படும் வழங்கீடுகளைப் பெற முடியாது என்றும் திரு சீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்