சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, நாட்டின் பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) கட்டமைப்பு, தாமதங்களின்றி இயங்குவதில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக 2 மில்லியன் கிலோமீட்டர் என்ற இலக்கைத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது.
5 நிமிடங்களுக்கும் மேலான ரயில் தாமதங்களுக்கு இடைப்பட்ட சராசரி தூரத்தைக் கணக்கிடும் முறையில் நம்பகத்தன்மை குறித்த புள்ளிவிவரங்கள் எட்டப்படுகின்றன.
அவ்வகையில் எம்ஆர்டி ரயில்கள் சராசரியாக 2.5 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளன. இது அதிகாரபூர்வ இலக்கான 1 மில்லியன் கிலோமீட்டரை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
இந்தக் காலகட்டத்தில், எஸ்பிஎஸ் டிரான்சிட் இயக்கும் வடகிழக்கு ரயில் பாதை 4.46 மில்லியன் கிலோமீட்டர் தூரத்துடன் தொடர்ந்து நாட்டின் மிகவும் நம்பகமான ரயில் பாதையாக முதலிடத்தில் உள்ளது.
எஸ்எம்ஆர்டி நிர்வகிக்கும் வட்ட ரயில் பாதை, வடக்கு-தெற்கு ரயில் பாதை ஆகியவை அதன் சேவையில் மிக முக்கிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
எல்டிஏ அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதத்தில் ஐந்து முக்கிய எம்ஆர்டி பாதைகளிலும் எல்ஆர்டி கட்டமைப்பிலும் 30 நிமிடங்களுக்கும் மேலான பெரிய ரயில்தாமதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்கப்பட்ட பயணங்களின் விழுக்காட்டைக் கொண்டு கணக்கிடப்படும் ரயில்களின் நேரப் பராமரிப்பு ஐந்து வழித்தடங்களிலும் 99.1 விழுக்காட்டிலிருந்து 99.32 விழுக்காடாகச் சற்றே உயர்ந்துள்ளது.
டெளன்டவுன் ரயில் பாதை மட்டுமே 99.92 விழுக்காட்டிலிருந்து 99.83 விழுக்காடாக சரிவைக் கண்டுள்ளது; மற்ற அனைத்து வழித்தடங்களும் நேரப் பராமரிப்புப் புள்ளிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளன.
99.81% ஆக இருந்த அட்டவணைப்படி இயக்கப்பட்ட ரயில் சேவைகளின் விகிதமும் 99.82 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த அறிக்கையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நம்பகத்தன்மை ஜூன் மாதத்தில் சீராக இருந்ததும், இது கோளாறுகளுக்கு இடையே சராசரியாக 355,000 ரயில்-கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதும் அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் எம்ஆர்டி வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாலும், ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படாததாலும் அவற்றின் ஒட்டுமொத்தப் பயணத் தூரம் கணிசமாகக் குறைவாக இருக்கும்.
இதன் காரணமாகவே, எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த வழித்தடம் ஒட்டுமொத்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று எல்டிஏ தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழித்தடத்திலும் ஜூன் மாதத்தில் 30 நிமிடங்களுக்கும் மேலான பெரிய ரயில்தாமதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சேவையாற்றுதல், நேரப் பராமரிப்பு ஆகிய இரண்டுமே ஜூன் மாதத்தில் 99 விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளன. இது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில், “கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் இந்த நம்பகத்தன்மை, நம் போக்குவரத்துப் பணியாளர்கள் ரயில் நிறுவனங்களின் கோளாறுகளை விரைவாகக் கண்டறிந்து சரிசெய்ய மேற்கொண்ட அர்ப்பணிப்பான கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். மேலும் பிப்ரவரி 2026ல் ‘ரயில் நம்பகத்தன்மை பணிக்குழு’ பரிந்துரைத்த திட்டங்களை எஸ்பிஎஸ் டிரான்சிட் எஸ்எம்ஆர்டி ஆகிய நிறுவனங்கள் ஆணையத்துடன் இணைந்து திறம்படச் செயல்படுத்தியதன் விளைவே இந்த முன்னேற்றம்” என்று குறிப்பிட்டுள்ளது.

