எம்ஆர்டி நம்பகத்தன்மை முதலாம் காலாண்டில் ஏற்றம்

2 mins read
1af652be-3089-444e-8d3a-83648793e4ba
வட்ட ரயில் பாதையும் இரு எல்ஆர்டி பாதைகளும் முன்பைவிட மோசமாக செயல்பட்டன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரயில் கட்டமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மேம்பட்டதால், 2024 முதலாம் காலாண்டில் எம்ஆர்டி ரயில்கள் தாமதமின்றி பயணத்தை மேற்கொண்டன என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஆகக் கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில், வட்ட ரயில் பாதையும் இரு எல்ஆர்டி பாதைகளும் முன்பைவிட மோசமாக செயல்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சராசரியாக, எம்ஆர்டி ரயில்கள் மொத்தம் 2.32 மில்லியன் ரயில்-கிலோ மீட்டர் தூரம் சென்றன. தாமதம் இருப்பினும் அது ஐந்து நிமிடங்களுக்கு மேற்போகாமல் இருந்தது. இது 2023ல் பதிவுசெய்யப்பட்ட 2.08 மில்லியன் ரயில்-கிலோ மீட்டர் தூரத்தை விட அதிகம்.

ஜூலை 11ஆம் தேதி வெளியான ஆகக் கடைசி அறிக்கையில், எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின்கீழ் இயங்கும் வட்ட ரயில் பாதைதான், சிங்கப்பூரில் உள்ள ஐந்து எம்ஆர்டி பாதைகளில் ஆகக் குறைவான நம்பகத்தன்யைப் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

வட்ட ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் தாமதங்களுக்கு இடையே சராசரியாக 1.03 மில்லியன் ரயில்-கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தது. 2023 ஆண்டுடன் ஒப்புநோக்க அது 181,000 ரயில்-கிலோ மீட்டர் குறைவு. 2022ல், 1.84 மில்லியன் ரயில்-கிலோ மீட்டர் தூரம் பதிவானது.

ஆணையத்தின் அறிக்கையில், இரு எல்ஆர்டி பாதைகளின் நம்பகத்தன்மையும் சரிந்தது. எஸ்பிஎஸ் நிறுவனம் நடத்தும் செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி, தாமதங்களுக்கு இடையே 814,000 ரயில்-கிலோ மீட்டரைப் பதிவு செய்தது. 2023 ஆண்டு முழுமைக்கும் அது 1.22 மில்லியன் ரயில்-கிலோ மீட்டர் தூரம் என்று பதிவானது.

எஸ்எம்ஆர்டி நடத்தும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி, தாமதங்களுக்கு இடையே 173,000 ரயில்-கிலோ மீட்டரைப் பதிவு செய்தது. 2023 ஆண்டு முழுமைக்கும் அது 248,000 ரயில்-கிலோ மீட்டர் தூரம் பதிவு செய்தது.

இரு எல்ஆர்டி ரயில் பாதைகளையும் சேர்த்து பார்க்கையில், முதலாம் காலாண்டில் அவை தாமதங்களுக்கு இடையே 375,000 ரயில்-கிலோ மீட்டர் தூரம் பதிவு செய்தது. 2023 ஆண்டு முழுமைக்கும் அவை 546,000 ரயில்-கிலோ மீட்டர் தூரம் பதிவு செய்தது.

மொத்தத்தில், 2015லிருந்து ரயில் நம்பகத்தன்மை, 2023ல் சிறிது சரிவு கண்டாலும் பொதுவாக குறிப்பிடத்தக்க அளவில் அது உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்