பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) கட்டமைப்பின் நம்பகத்தன்மை இவ்வாண்டு (2025) ஜூன் மாதத்துடன் முடிந்த 12 மாதங்களில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அண்மைப் புள்ளிவிவரங்களில் அது தெரியவந்தது.
இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான ஓராண்டுக் காலத்தில் ஐந்து நிமிடங்களுக்கும் மேல் தாமதம் ஏற்பட்ட சம்பவங்களுக்கு இடையிலான தொலைவு சராசரியாக 1.6 மில்லியன் கிலோமீட்டராக இருந்தது. சென்ற ஆண்டின் (2024) 1.98 மில்லியன் கிலோமீட்டர் தொலைவைக் காட்டிலும் அது குறைவு.
ஒப்புநோக்க 2020ல், தாமதமின்றி ரயில்கள் பயணம் செய்த சராசரித் தொலைவு 1.45 மில்லியன் கிலோமீட்டர்.
ஆணையம் காலாண்டுக்கு ஒரு முறை நம்பகத்தன்மை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. ஒரு ரயில் 12 மாதங்களில் தாமதம் ஏற்படும் சம்பவங்களுக்கு இடையில் பயணம் செய்த சராசரி கிலோமீட்டரைப் பயன்படுத்தி நம்பகத்தன்மை குறித்த புள்ளிவிவரங்கள் எட்டப்படுகின்றன. ஒரு ரயில் ஐந்து நிமிடங்களுக்கும் மேல் தாமதமின்றிச் செல்லும் தொலைவை அது கணக்கிடுகிறது.
எம்ஆர்டி கட்டமைப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு ஒரு மில்லியன் கிலோமீட்டர். அனைத்துத் தடங்களும் அதை விஞ்சிவிட்டன.
இருப்பினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நம்பகத்தன்மை குறைந்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை வடகிழக்குத் தடத்திலும் வட்டப் பாதையிலும் நம்பகத்தன்மை மேம்பட்டுள்ளது. ஆனால் மற்ற மூன்று தடங்களில் நம்பகத்தன்மை குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும் ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஐந்து ரயில் தடங்களுக்கு இடையே வட்டப் பாதையில்தான் நம்பகத்தன்மை ஆகக் குறைவாக உள்ளது.
எஸ்எம்ஆர்டி நிர்வகிக்கும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடம் அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மற்றத் தடங்களுடன் ஒப்பிடுகையில் அந்தத் தடத்தின் தற்போதைய செயல்முறைப் புள்ளிவிவரங்கள் அதன் நம்பகத்தன்மையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கவில்லை என்று ஆணையம் முன்னர் தெரிவித்திருந்தது.
எம்ஆர்டி கட்டமைப்பில் வடகிழக்குத் தடம் சிறப்பாகச் செயல்பட்டது. சென்ற ஆண்டு முதலிடத்தைப் பிடித்த டௌன்டவுன் தடத்திற்கு இம்முறை இரண்டாம் இடம். இரண்டு தடங்களையும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நிர்வகிக்கிறது.
தாமதம் ஏற்பட்ட சம்பவங்களுக்கு இடையில் வடகிழக்குத் தடத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணத் தொலைவு 4.23 மில்லியன் கிலோமீட்டர். கடந்த ஆண்டின் (2024) 4.1 மில்லியன் கிலோமீட்டரைவிட அது அதிகம்.
டௌன்டவுன் தடத்தில் தாமதங்களுக்கு இடையிலான பயணத் தொலைவு 4.12 மில்லியன் கிலோமீட்டராகப் பதிவானது. சென்ற ஆண்டில் அது 8.13 மில்லியன் கிலோமீட்டராக இருந்தது.
மூன்றாம் நிலையில் கிழக்கு-மேற்குத் தடமும் நான்காம் இடத்தில் வடக்கு-தெற்குத் தடமும் வந்தன. ரயில் கட்டமைப்பின் ஆகப் பழைமையான அந்த இரண்டு தடங்களையும் எஸ்எம்ஆர்டி நிர்வகிக்கிறது.
இலகு ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மை கூடியுள்ளது. கடந்த ஓராண்டில் தாமதங்களுக்கு இடையில் சராசரிப் பயணத் தொலைவு 534,000 கிலோமீட்டராக இருந்தது. முந்திய ஆண்டின் 382,000 கிலோமீட்டரைக் காட்டிலும் அது அதிகம்.