தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கிழக்கு-மேற்கு ரயில் தடம்

3 நிலையங்களின் சீரமைப்பால் சேவையில் மாற்றம் இருக்கும்: எல்டிஏ

2 mins read
fcee1882-e390-429f-a920-681e07a32750
சாங்கி விமான நிலைய 5ஆம் முனையத்தின் வரைபடம். எதிர்காலத்தில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்குச் சேவை சுமுகமாக இருக்கும். - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

கிழக்கு-மேற்குத் தடத்தைப் பயன்படுத்தும் பயணிகள் எதிர்வரும் ஆண்டுகளில் ரயில் சேவைகளில் வரவிருக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். தானா மேரா, எக்ஸ்போ, சாங்கி விமான நிலையம் ஆகிய ரயில் நிலையங்களில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் பெரிய அளவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

அந்த மூன்று நிலையங்களும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்திற்கு மாற்றிவிடப்படும். சாங்கி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரின் நகர மையத்திற்கு நேரடி ரயில் சேவையை வழங்கும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி அது.

கட்டுமானப் பணிகள் குறித்த கூடுதல் விவரங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியிட்டது.

வரைகலை: நிலப் போக்குவரத்து ஆணையம்
வரைகலை: நிலப் போக்குவரத்து ஆணையம் - தமிழாக்கம்: பிரசாந்தி
வரைகலை: நிலப் போக்குவரத்து ஆணையம்
வரைகலை: நிலப் போக்குவரத்து ஆணையம் - தமிழாக்கம்: பிரசாந்தி

மாற்றங்களுக்குப் பிறகு தானா மேராவிலிருந்து சாங்கி விமான நிலையம் வரையிலான பகுதி தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தின் புதிய விரிவாக்கத்தின் அங்கமாகும். அது எதிர்காலத்தில் வரவிருக்கும் ஐந்தாம் முனையம் வழியாகச் சென்று புதிதாக உருவாகும் சுங்கை பிடோக் ரயில் நிலையத்துடன் இணையும். சுங்கை பிடோக் நிலையம் அடுத்த ஆண்டின் (2026) இரண்டாம் பாதியில் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14 கிலோமீட்டர் விரிவாக்கம், 2030களில் நடுப்பகுதியில் நிறைவுறும் என்று நம்பப்படுகிறது. அதே காலகட்டத்தில்தான் ஐந்தாம் முனையமும் சேவைக்குத் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தானா மேரா நிலையத்தைச் சந்திப்பு நிலையமாக உருமாற்றும் பணிகள் 2016லிருந்தே நடைபெறுகின்றன.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் நிறைவுற்றதும் எதிர்காலத்தில் விமான நிலையத்திற்கு வந்துபோகும் பயணிகளுக்கு ரயில் சேவைகள் சுமுகமாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்