மரினா பே எம்ஆர்டி நிலையத்துக்கும் புரோமனாட் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையிலான மூன்று நிலையங்களைக் கொண்ட பாதையில் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைத் தடை காரணமாக வழங்கப்பட்ட இலவச பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை (செப்டம்பர் 1) காலை 9.17 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.
வட்ட ரயில் பாதையில் மரினா பே நிலையத்துக்கும் புரோமனாட் நிலையத்துக்கும் இடையில் உள்ள மூன்று நிலைங்கள் கொண்ட பாதையில் திங்கட்கிழமை காலை சேவைத் தடை ஏற்பட்டிருந்தது.
ரயில் பழுதடைந்ததால் இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
டோபி காட், பீஷான் எம்ஆர்டி நிலையங்களில் வடக்கு-தெற்கு ரயில் பாதைக்கும் கால்டிகாட் எம்ஆர்டி நிலையத்தில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கும் மாறிக்கொள்ளுமாறு மரினா பே நோக்கிப் பயணம் செய்யும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது .
இதுதொடர்பாகக் காலை 8.40 மணிக்கும் 8.50 மணிக்கும் எக்ஸ் தளத்தில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் பதிவிட்டது.
பேஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தை நோக்கிப் பயணம் செய்வோர் டௌன்டவுன் ரயில் பாதையில் செல்ல புரோமனாட் அல்லது மெக்பர்சன் எம்ஆர்டி நிலையங்களில் மாறிக்கொள்ளலாம் என்றும் அது தெரிவித்திருந்தது.
காலை உச்சவேளையின்போது ஏற்பட்ட ரயில் சேவைத் தடையால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக எஸ்எம்ஆர்டி நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.