ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, எம்ஆர்டி ரயில் சேவைத்தரம் ஆகஸ்ட் மாதத்தில் சற்று குறைந்தாலும் ஜூன் மாதத்தின் பின்னடைவைவிட சராசரியாக முன்னேற்றம் கண்டுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கிய புள்ளிவிவரங்கள் இதனைக் குறிப்பிடுகின்றன. முதன்முறையாக ரயில்சேவையின் நம்பகத்தன்மைக்கான மாதாந்தர புள்ளிவிவரங்களை வழங்கும் நடைமுறையை ஆணையம் தொடங்கியுள்ளது.
முன்பு, நான்கு காலாண்டுகள் அடிப்படையில் சேவைத்தரம் வெளியிடப்பட்டது. வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்றுக்கொள்ளுதல் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆணையம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) விளக்கியது.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் நிலப்போக்குவரத்து ஆணையத்தை மாதாந்தர அடிப்படையில் ரயில் சேவைகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
“ஒரு சிறந்த கட்டமைப்பு நம்மிடம் உள்ளதால், மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள் வெளிப்படைத்தன்மையாக நடந்துகொள்வோம்” எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட பயண தூரம், ரயில்கள் நிலையங்களை சேரும் நேரம், பணிமனைகளை அடையும் காலம் போன்ற பலவற்றை உள்ளடக்கி புள்ளிவிவரங்களை வெளியிட நிலப் போக்குவரத்து ஆணையம் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
ரயில் நம்பகத்தன்மை அண்மைய காலமாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் வரையில் 15 முறை சேவைத் தடை ஏற்பட்டுள்ளதால், அரசாங்கம் ரயில் நம்பகத்தன்மைக்கென பணிக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.