மின் கோளாறு சரிசெய்யப்பட்டது; வட்டப் பாதையில் ரயில் சேவை தொடர்ந்தது

மின் கோளாறு சரிசெய்யப்பட்டது; வட்டப் பாதையில் ரயில் சேவை தொடர்ந்தது

1 mins read
2e557a9e-4847-4670-b525-7c24770ca365
போன விஸ்தா ரயில் நிலையத்தில் கூட்ட நிலவரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வட்ட ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) ஏற்பட்ட மின் கோளாற்றால் மாலை உச்சநேர பயணங்களுக்கு ஏறக்குறைய அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், மாலை 5.50 மணியளவில் வட்டப் பாதையில் தற்காலிகமாக மின் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்தது. இதனால் இரு திசைகளிலும் ரயில் சேவை இயங்கவில்லை.

மின் கோளாறு 15 நிமிடங்களுக்குள் சரிசெய்யப்பட்டு விட்டதாக எஸ்எம்ஆர்டி கூறியது.

“எங்கள் பொறியாளர்கள், கட்டமைப்புக்கு மின் விநியோகத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவந்தனர். பிறகு ரயில் சேவை தொடர்ந்தது. தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உதவ எங்கள் நிலைய ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,” என்று எஸ்எம்ஆர்டி விவரித்தது.

பயணிகள் இதர ரயில் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்திய எஸ்எம்ஆர்டி, வழக்கமான இலவசப் பேருந்துச் சேவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகச் சொன்னது.

மாலை வேளை பயணத்துக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக எஸ்எம்ஆர்டி மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்