தெங்கா கார்டன் அவென்யூவில் உள்ள தற்காலிக கால்வாயில் காணப்பட்ட கலங்கலான நீர், அண்மையில் பெய்த கனத்த மழையால் தேங்கிய சேற்றால் ஏற்பட்டது எனத் தேசிய தண்ணீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.
கால்வாயில் சேர்ந்த சுத்திகரிக்கப்படாத சேற்றுநீர் ஜூரோங் கால்வாயைச் சென்றடைந்தது என்றும் ஜூரோங் ஏரியிலும் கலந்திருக்கக்கூடும் என்றும் பியுபி சொன்னது. ஜூரோங் ஏரி சிங்கப்பூரின் 17 நீர்த்தேக்கங்களில் ஒன்று.
தற்காலிக கால்வாயில் சேற்றுநீர் சேர்ந்ததற்குப் பொறுப்பான கட்டுமான நிறுவனத்தை நிலைமையைச் சரிசெய்யும்படி பியுபி கூறியது.
சிங்கப்பூர் இயற்கை ஆர்வலர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கால்வாயில் தேங்கிய சேற்றுநீரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
தெங்கா வட்டாரத்தில் உள்ள பல்வேறு கட்டுமானத் தளங்களிலும் தற்காலிக கால்வாயிலும் கலங்கலான சேற்றுநீர் இருப்பதைக் காட்டும் படங்களைக் குழு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இம்மாதம் 22ஆம் தேதி பதிவேற்றியது.
பொதுக் கால்வாய்களில் விடப்படும் சேற்றுநீரில் கல்லும் மண்ணும் இருப்பதால் கடுமையான மழை பெய்யும்போது மழைநீர் சரிவர வடியாமல் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பியுபி விளக்கம் தந்தது.
கட்டுமான நிறுவனங்கள் சேற்றுநீரைச் சுத்திகரித்த பிறகுதான் அதை கால்வாயில் விடவேண்டும்.
அதிகாரிகளின் சோதனையின்போது தெங்கா கார்டன் அவென்யூவில் உள்ள சாலையோரப் பகுதிகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதன் காரணமாக கால்வாயில் சேறு சேர்ந்திருக்கலாம் என்றது பியுபி.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருவதாக சொன்ன பியுபி, சாலையோரப் பகுதிகளை எந்தெந்த அமைப்புகள் நிர்வகிக்கிறது என்பதைக் குறிப்பிடவில்லை.