வக்ஃப் வருவாயில் $8 மில்லியன் கொடையாக வழங்கப்படும்: முயிஸ்

வக்ஃப் வருவாயில் $8 மில்லியன் கொடையாக வழங்கப்படும்: முயிஸ்

1 mins read
cd5b9cbe-1369-499d-abcb-92e4866750ee
இவ்வாண்டு வக்ஃப் வருவாயில் $4.5 மில்லியனை உள்ளூர்ப் பயனாளிகள் பெறுவர். இது 2024 நிதியாண்டைக் காட்டிலும் 6.6 விழுக்காடு அதிகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், இவ்வாண்டு வக்ஃப் மூலம் கிடைக்கும் $8 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், முஸ்லிம் அமைப்புகள், அறநிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் உள்ள பிற பயனாளிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு, மன்றத்தால் நிர்வகிக்கப்படும் வக்ஃப் வருமானத்திலிருந்து மொத்தம் $8.48 மில்லியன் வழங்கப்படும்.

அந்த நிதி, சமயக் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதோடு இஸ்லாமியக் கல்விக்கு ஆதரவளிக்கவும் பரந்த சமூகத்திற்குப் பயனளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தவும் உதவும் என்று முயிஸ் தெரிவித்துள்ளது.

வக்ஃப் என்பது சமய, சமூகத் தேவைகளுக்கு நிதியளிக்க முஸ்லிம் பெருமக்கள் பணம் அல்லது சொத்துகளை வழங்கும் ஓர் இஸ்லாமிய அறக்கொடை முறையாகும்.

சிங்கப்பூரில் கடைகள், வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் உள்ளிட்ட அத்தகைய சொத்துகளை சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய், பள்ளிவாசல்களுக்கும் மதரஸாக்களுக்கும் தேவையுள்ளோருக்கும் வழங்கப்படுவதுடன் பிற தொண்டுப் பணிகளுக்கும் அளிக்கப்படுகிறது.

இவ்வாண்டில் அந்தத் தொகையில் $4.5 மில்லியனை உள்ளூர்ப் பயனாளிகள் பெறுவர். இது 2024 நிதியாண்டைக் காட்டிலும் 6.6 விழுக்காடு அதிகம். எஞ்சிய $3.98 மில்லியன் அந்தந்த வக்ஃப் சொத்துப் பரிமாற்றப் பத்திரங்களுக்கு இணங்க வெளிநாட்டுப் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
முயிஸ்வருமானம்பள்ளிவாசல்