முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தனது 20வது சமய மன்றத்தை நியமித்துள்ளது.
சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகத்தின் சமய, சமூகத் தேவைகளை அறிந்து மேலாண்மை புரிவதற்கு அந்த மன்றத்தில் இடம் வகிக்கும் 19 பேர் உதவுவர் என்று முயிஸ், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அவர்களில் ஒன்பது பேர் புதிய உறுப்பினர்கள். புதியவர்களில் அறுவர், 45 வயதுக்கும் குறைவானவர்கள்.
புதிய மன்றத்தில் அனுபவ அறிவுடன் புதிய கண்ணோட்டங்களைக் கலப்பதாக முயிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. கல்வி, பொதுத் துறை, வர்த்தகம், சமயம், சமூகம் ஆகிய துறைகளிலிருந்து நெடுநாள் தலைவர்களும் வளர்ந்துவரும் தலைமுறையினரும் மன்றத்தில் இணைந்திருப்பதாக முயிஸ் கூறியது. புதிய மூயிஸ் மன்றம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் செயல்படும்.
வெளியேறிய 19வது மன்றத்திற்குத் தம் நன்றியை வெளிப்படுத்திய முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், தற்போது நியமக்கப்பட்டுள்ள மன்றத்தில் பல்வேறு கண்ணோட்டங்கள் சமச்சீராக இருப்பதைப் பாராட்டினார்.
‘‘தற்போது மிக வேகமாக மாறிவரும் சூழலில் நம் சமூகத்தை முன்னோக்கி இட்டுச் செல்வதற்கும் அதன் சமய, சமூகத் தேவைகளை நிறைவுசெய்வதற்கும் அனுபவமிக்க தலைமைத்துவமும் புத்தாக்கமான பார்வைகளும் தேவைப்படுகின்றன,’’ என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
முஸ்லிம் சமூகத்தின் மேம்பட்டுவரும் தேவைகளுக்கு ஏற்ற, பொருத்தமிகு திட்டங்களைச் சென்றுசேர்க்கும் முயிஸின் கடப்பாட்டை, புதிய மன்றத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த திறன்கள் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.
மன்றத்தின் புதிய உறுப்பினர்களில் ஒருவரான கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் அகமது பஸீர் அமீர் சுல்தான், 43, பல்வேறு துறைகளில் பழுத்த அனுபவம் பெற்றுவருபவர்களுடன் இணைந்து செயலாற்றுவதை நற்பேறாகக் கருதுவதாகக் கூறினார். இனம், துறை, அன்றாட வாழ்க்கை எனப் பல்வேறு பின்னணிகளிலிருந்து வருபவர்களைக் கொண்ட புதிய மன்றத்தின் பன்முகத்தன்மை, சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்திற்குச் சேவையாற்றும் வாய்ப்பை மேம்படுத்துவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘‘இந்திய முஸ்லிம்களின் அனுபவத்தால் செதுக்கப்பட்டுள்ள கருத்துகளை நான் கொண்டுவருகிறேன். நம் திட்டங்களையும் முயற்சிகளையும் வலுப்படுத்தும் கூட்டுறவு முயற்சிகளின் வழியாக பரந்த சமூகத்திற்கு அர்த்தமுள்ள முறையில் பங்களிக்கவேண்டும் என்பதில் கடப்பாடு கொண்டுள்ளேன்,’’ என்று அவர் கூறினார்.

