முயிஸ் ரமலான் ஆதரவுத் தொகுப்புத் திட்டம்: 10,500 பேர் பயன்பெறுவர்

முயிஸ் ரமலான் ஆதரவுத் தொகுப்புத் திட்டம்: 10,500 பேர் பயன்பெறுவர்

1 mins read
669e53ee-5499-4c79-82c3-187a7167fa10
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் (நடுவில்) நோன்புப் பெறுநாள் பலகாரங்களை வழங்குகிறார். அவருடன் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (இடது), நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சையத் ஹருன் அல்ஹப்சி உள்ளனர். - படம்: முயிஸ்

ரமலான் ஆதரவுத் திட்டத்திலிருந்து பயன்பெறும் 10,500க்கும் மேற்பட்டோர், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வழங்கிய 4.3 மில்லியன் வெள்ளித் தொகுப்புத்திட்டத்தின்கீழ் வழங்கீடுகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

ரமலான் மாதத்தின்போது அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் அந்த வழங்கீடுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கியதாக முயிஸ் கூறியது.

அதுகுறித்துத் தகுதிபெறுவோருக்கு அஞ்சல்வழி தெரிவிக்கப்பட்டது.

மாதாந்தர ஸக்காத் ஆதரவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்வாழ்வு இல்லங்களில் உள்ள முஸ்லிம் குடியிருப்பாளர்கள், காம்கேர் நீண்டகால உதவித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளவர்கள், குடும்பச் சேவை நிலையங்கள் பரிந்துரைத்த குடும்பங்கள், குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் உயர்கல்வி மாணவர்கள் ஆகியோருக்கு அந்த நிதி வழங்கப்படும்.

மாதாந்தர ஸக்காத் தொகையால் பயனடையும் 5,000க்கும் அதிகமான குடும்பங்கள், குடும்ப அளவைப் பொறுத்து, $150 முதல் $2,100 வரையிலான ஆதரவைப் பெறுவார்கள்.

தகவல், தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள், முதல்முறையாக முழுநேரப் புகுமுக மதரசா மாணவர்கள் எனக் கிட்டத்தட்ட 1,400 மாணவர்களுக்குப் பள்ளி தொடர்பான செலவுகளுக்கு உதவ $300 வழங்கப்படும்.

கிட்டத்தட்ட 2,600 தேர்ந்தெடுக்கப்பட்ட நல்வாழ்வு இல்லவாசிகள், காம்கேர் நீண்டகால உதவித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளவர்கள், குடும்பச் சேவை நிலையங்கள் பரிந்துரைத்த குடும்பங்கள், தேவையுடைய குடும்பங்களிலிருந்து வரும் சமயக் கல்வியாளர்கள் ஆகியோருக்குக் குறைந்தது $150 கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்