பள்ளிவாசல்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்கிறது முயிஸ்

சிறார் பாலியல் துன்புறுத்தல்

பள்ளிவாசல்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்கிறது முயிஸ்

2 mins read
49ff488d-22dc-4ab4-a254-d469ba738c5b
பள்ளிவாசல்கள் எப்போதும் திறக்கப்பட்டு, சமூகம் முழுமையாகப் பாதுகாப்பாக உணரும் இடமாகத் திகழ வேண்டும் என்று திரு ஸாக்கி முகம்மது வலியுறுத்தியுள்ளார். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

பள்ளிவாசல் ஒன்றில் நடந்த சிறுவர் பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து, இங்குள்ள பள்ளிவாசல்களில் பாதுகாப்பை அதிகரிப்பதோடு அவற்றின் பாதுகாப்பு நடைமுறைகளையும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) மறுஆய்வு செய்து வருகிறது. இரு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காக, தம்மை ஆன்மிக ரீதியில் செல்வாக்குமிக்கவராகக் கூறிக்கொண்ட 37 வயது ஆடவருக்கு 27 ஆண்டுகள் 10 மாதச் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) விதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட சிறுவர்களில் இளையவருக்குக் குற்றம் இழைக்கப்பட்டபோது ஆறு முதல் எட்டு வயதும் அவரின் மூத்த சகோதரருக்கு 11 முதல் 12 வயதும் இருக்கும். அத்துடன், தம்மைப் ‘பெரியண்ணனாகவும்’ சமய வழிகாட்டியாகவும் கருதிய 17 வயது இளையர் உட்பட மேலும் மூவரை மானபங்கம் செய்த குற்றத்தைதையும் அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரவணைப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதிசெய்ய, தொடர்புடைய பிற அமைப்புகளுடன் இணைந்து முயிஸ் செயல்பட்டு வருவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பள்ளிவாசல் ஊழியரோ, தொண்டூழியரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சமய ஆசிரியரோ அல்லர் என்றபோதிலும், பாதிக்கப்பட்டவர்களுடனான அவரது சில தொடர்புகள் பள்ளிவாசலில் நடைபெற்றதாக திரு ஸாக்கி சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கொடுமை எந்தக் குழந்தைக்கும் எங்குமே நிகழ்ந்திருக்கக்கூடாது என்று அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்தார். பள்ளிவாசல்களில் சுற்றுக்காவல், கண்காணிப்புப் படக்கருவிகளின் பயன்பாட்டை அதிகரிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முயிஸ் அறிவித்துள்ள போதிலும், பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் தீவிரமாக மறுஆய்வு செய்யுமாறு தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக திரு ஸாக்கி கூறினார். “குறிப்பாக, சிறுவர்களும் இளையர்களும் பங்கேற்கும் அதிகாரபூர்வமற்ற நடவடிக்கைகளையும் ஒன்றுகூடல்களையும் சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்றார் அவர்.

பள்ளிவாசல்கள் எப்போதும் திறக்கப்பட்டு குழந்தைகள், குடும்பங்கள், சமூகம் என அனைவரும் முழுமையாகப் பாதுகாப்பாக உணரும் இடமாகத் திகழ வேண்டும் என்று திரு ஸாக்கி வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
முயிஸ்பள்ளிவாசல்பாலியல்