புனித ஹஜ்ஜுப் பயணத்துக்குப் புதிய நடைமுறைகள்: முயிஸ் அறிவிப்பு

புனித ஹஜ்ஜுப் பயணத்துக்குப் புதிய நடைமுறைகள்: முயிஸ் அறிவிப்பு

2 mins read
9afb789e-de78-407c-84d9-18eb328b349e
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் ஹஜ்ஜுப் புனித யாத்திரை தொடர்பில் பேசினார். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரைச் சேர்ந்த 900 யாத்திரிகர்களின் புனித ஹஜ்ஜுப் பயணத்துக்கு முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் இவ்வாண்டு தலைமை தாங்குவார்.

கடந்த ஆண்டு (2025) மே மாதம் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட இணைப் பேராசிரியர் ஃபை‌‌‌ஷால் ஹஜ்ஜுப் பயணத்துக்கு முதன்முறையாகத் தலைமை தாங்குகிறார்.

சிங்கப்பூரிலிருந்து செல்லும் யாத்திரிகர்களும் சவூதி அரேபியாவுக்கு முதன்முறையாக மூன்று நேரடி விமானங்கள் மூலம் சென்றுவருவர்.

இவ்வாண்டு ஹஜ்ஜுப் பயணத்துக்குச் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) அறிவித்துள்ள புதிய நடைமுறைகளில் அதுவும் ஒன்று.

சிங்கப்பூர் யாத்திரிகர்கள் மே 9, 12, 14ஆம் தேதிகள் ஹஜ்ஜுப் பயணத்துக்குப் புறப்பட்டு ஜூன் 1, 5, 8ஆம் தேதிகளில் திரும்புவர்.

யாத்திரிகளுக்குக் கட்டாய ‘நுசுக்’ அட்டையும் இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புறப்பாட்டுக்குமுன் யாத்திரிகள் அந்த அட்டையைக் காண்பிக்கவேண்டும்.

யாத்திரிகர்களின் தனிபட்ட விவரங்கள் அடங்கிய நுசுக் அட்டை, சவூதி அரேபியா வழங்கும் அதிகாரபூர்வ ஆவணம். அந்த அட்டையைக் கொண்டு புனிதத்தலங்களுக்கு யாத்திரிகள் செல்வதோடு தங்குமிட, போக்குவரத்து வசதிகளையும் பெறலாம்.

ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்கள்.
ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்கள். - படம்: ராய்ர்ட்டர்ஸ்

புனிதத்தலத்திற்குச் சென்ற பிறகு வழங்கப்படும் நுசுக் அட்டைகள் முதன்முறையாக ஹஜ்ஜுப் பயணத்துக்குப் புறப்படுவதற்கு முன்னரே வழங்கப்படுகின்றன.

யாத்திரிகர்களின் நலனைக் கருத்தில்கொண்டு புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக முயிஸ் குறிப்பிட்டது.

முதல் யாத்திரிகர்களின் குழு, மே 9ஆம் தேதி புனிதப் பயணத்துக்குப் புறப்படும்.

அனைத்துலக அளவில் உள்ள நிச்சயமற்ற சூழலுக்கு இடையே யாத்திரிகர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக உள்துறை அமைச்சுக்கான மூத்த துணையமைச்சருமான டாக்டர் ஃபை‌‌‌ஷால் குறிப்பிட்டார்.

சன்டெக் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் முயிஸ் அமைப்பும் சிங்கப்பூர் முஸ்லிம் பயண முகவர்களுக்கான சங்கமும் யாத்திரைக்குமுன் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் டாக்டர் ஃபை‌‌‌ஷால் பேசினார்.

“மத்திய கிழக்கில் உள்ள தற்போதைய நிலவரத்தால் யாத்திரிகர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கவலையுற்றிருப்பது தெரியும்,” என்ற டாக்டர் ஃபை‌‌‌ஷால், “இவ்வாண்டுக்கான புனித ஹஜ்ஜுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யும்போது உங்கள் அக்கறைகளைக் கருத்தில்கொண்டுள்ளோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்