தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல சமயத்தினர் ரத்த தானத் திட்டம்; அலைமோதிய இளையர் கூட்டம்

2 mins read
3e6d4282-37d8-4a5a-8d11-57f136ee14fe
ரத்த தானம் செய்த இளையருடன் உரையாடிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: பெரித்தா ஹரியான்

பல்லின, பல சமய மக்கள் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் பலசமயத்தினர் ஒன்றிணைந்து ரத்த தானம் செய்யும் திட்டம் தொடர்பான யோசனை 2016ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.

இத்திட்டம் இன்றும் வெற்றி நடை போடுகிறது.

அக்டோபர் 30ஆம் தேதியன்று யூனோஸ் வட்டாரத்தில் உள்ள ஹார்ட் ஆஃப் காட் தேவாலயத்தில் பலசமயத்தினர் ஒன்றிணைந்து ரத்த தான நிகழ்வு நடைபெற்றது.

ஆறாவது முறையாக நடத்தப்பட்ட இத்திட்டத்தில் ரத்த தானம் செய்தவர்களில் பெரும்பாலானோர் இளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களில் ஆக இளையவர் 16 வயது குமாரி கிளேர் லியூங்.

“நான் ரத்த தானம் செய்வதும் பல சமயத்தினருக்கான நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. பல சமய மக்களுடன் இணைந்து ரத்த தானம் செய்வது மிகவும் சுவாரசியமாக இருந்தது. உயிர்களைக் காப்பாற்றவும் சமூகத்துக்கும் நல்லது செய்யவும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டோம்,” என்று ஹார்ட் ஆஃப் காட் தேவாலயத்தின் உறுப்பினரான குமாரி லியூங் தெரிவித்தார்.

ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை 4ல் பயிலும் குமாரி லியூங்கிற்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் பரிசுப் பொட்டலம் ஒன்றை வழங்கினார்.

இவ்வாண்டு நடைபெற்ற ரத்த தான நிகழ்வுக்கு ஏறத்தாழ 200 பேர் திரண்டனர்.

இந்நிகழ்வுக்கு ஹார்ட் ஆஃப் காட் தேவாலயம், காலித் பள்ளிவாசல், கேலாங் யுனைடெட் ஆலயம், சான் கூ கோங் ஹுவே குலவழிச் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

இன, சமய நல்லிணக்க சர்க்கிள் அமைப்பு, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், கேலாங் அக்கம்பக்க காவல்துறை நிலையம் ஆகியவற்றின் ஆதரவில் இந்த ரத்த தான நிகழ்வு நடைபெற்றது.

இத்திட்டம் 2017ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 840 நன்கொடையாளர்களிடமிருந்து 250 லிட்டர் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 1,600க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரர்களால் ஒன்றாகச் செயல்பட முடியும், ஒன்றிணைந்து ரத்த தானம் செய்ய முடியும், பல சமயத்தினர்கள் ஒற்றுமையுடன் ஒன்று கூட முடியும் என்பதை இத்தகைய நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுவதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

ரத்த தான நிகழ்வில் கலந்துகொண்ட இளையர்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

“நாம் சிங்கப்பூரர்கள், நாம் மற்றவர்களைவிட வித்தியாசமானவர்கள், ஒருவரையொருவர் உதவி செய்யும் தன்மை கொண்டவர்கள், இனம் மற்றும் சமயத்தையும் கடந்து அன்புடன் பழகக்கூடியவர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்பதை இந்த ரத்த தான நிகழ்வு காட்டுகிறது.

“இத்தகைய நிகழ்வுகள் வலுவான உறவுகளை உருவாக்குகின்றன. பொதுவான நோக்கத்துக்காக வெவ்வேறு சமய அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் சிங்கப்பூரர்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வது தெரியவருகிறது,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்