புக்கிட் பாஞ்சாங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) இரவு பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து, போதைப்பொருள் உட்கொண்ட பிறகு வாகனத்தைச் செலுத்திய சந்தேகத்தின் பேரில் வேன் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
புக்கிட் பாஞ்சாங் சாலையில் புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட்டை நோக்கிச் செல்லும் வழியில் நடந்த இந்த விபத்து குறித்து வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்தில் சிக்கிய வேனிலிருந்து இரு மின்சிகரெட்டுகளையும் மூன்று திரவக் குப்பிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 27 வயது ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதற்காகக் கைதுசெய்யப்பட்டார்.
மின்சிகரெட் தொடர்பான குற்றம் சுகாதார அறிவியல் ஆணையத்தின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்துவருவதாகக் காவல்துறை கூறியது.
இந்த விபத்தில் வேனைத் தவிர, ஒரு மோட்டார்சைக்கிளும் இரண்டு கார்களும் சம்பந்தப்பட்டுள்ளன. விபத்தில் இருவர் லேசான காயமடைந்தனர். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
‘எஸ்ஜிஃபாலோஸ்ஆல்’ ‘sgfollowsall’ எனும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் சென்றதாகக் கருதப்படும் வேன், ஒரு சிவப்பு நிற காரின் முன் பகுதியில் நேருக்கு நேர் மோதி நிற்பது தெரிகிறது. அந்த இரண்டு வாகனங்களுக்கும் இடையில் ஒரு மோட்டார்சைக்கிள் நசுங்கிய நிலையில் சிக்கியிருந்ததைக் காண முடிகிறது.


