விபத்தில் சிக்கி வாகனங்கள்; மருத்துவமனையில் மூவர்

விபத்தில் சிக்கி வாகனங்கள்; மருத்துவமனையில் மூவர்

படம்: எஸ்ஜி ரோட் புளோக்ஸ் ட்ரேஃபிக்/ டெலிகிராம்

19 Aug 2026 - 7:33 pm

1 mins read

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) ஏற்பட்ட கடுமையான வாகன விபத்தில் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவரும் மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மண்டாய் சாலையை நோக்கிச் செல்லும் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள், ஒரு லாரி, ஒரு பேருந்து ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாகக் காவல்துறை சொன்னது.

சம்பவம் குறித்து காலை 9 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

விபத்தில் ஈடுபட்ட 58 வயது கார் ஓட்டுநர், 54 வயது மோட்டார்சைக்கிளோட்டி, 57 வயது பேருந்து ஓட்டுநர் ஆகியோர் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவிவருகிறார்.

சேவையில் இல்லாத பேருந்து எண் 170 விபத்தில் ஈடுபட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேச்சாளர் கிரேஸ் ஃபூ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டார்.

“விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனவோட்டிகள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில் உதவிவருகிறோம்,” என்று அவர் கூறினார்.

சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் விரைவுச்சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பில் எஸ்பிஎஸ் பேருந்து ஒன்று மோதிய நிலையில் காணப்பட்டது.

சாலைக்கு நடுவில் உள்ள தடுப்புகளும் சேதமடைந்திருந்தன.

குறிப்புச் சொற்கள்
வாகனம்விபத்துவிரைவுச்சாலைமருத்துவமனைஅனுமதி