புதிய கால்நடை மருத்துவக் குழுவில் பலதரப்பட்ட நிபுணர்கள்

புதிய கால்நடை மருத்துவக் குழுவில் பலதரப்பட்ட நிபுணர்கள்

2 mins read
22383deb-9d04-44ae-89f9-954e02366841
கால்நடை மருத்துவம் சாராத இரு நிபுணர்களும் புதிய குழுவில் இடம்பெற்றுள்ளனர். - கோப்புப் படம்: நியூ பேப்பர்

புதிதாக நிறுவப்பட்டுள்ள சிங்கப்பூர் கால்நடை மருத்துவக் குழுவின் 14 உறுப்பினர்களில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களும் கால்நடை மருத்துவம் சாராத இரு நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.

பொதுநலனைப் பாதுகாக்கும் அதேவேளை, தொழிற்துறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்திச் சமநிலையான முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்யவே பல்வேறு தரப்பினரும் அந்த மருத்துவக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக விலங்குநல மருத்துவச் சேவை (AVS) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட கால்நடை மருத்துவப் பயிற்சிச் சட்டத்தின்கீழ் அந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் கால்நடை மருத்துவத்துறையின் நிபுணத்துவத் தரத்தை உயர்த்தவும் கால்நடை மருத்துவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றுவதோடு தங்களது பணிகளுக்கு அவர்கள் பொறுப்பேற்பதை உறுதிசெய்யவும் அந்தப் புதிய குழு நிறுவப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு குழு அமைக்கப்படுவதை இத்துறை நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்ததாகக் கூறினார் அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டாக்டர் கேத்தி சான்.

அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறுகையில், “நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய தரநிலையை நிர்ணயிக்க உதவும் வகையில் நடுநிலையான அமைப்பு ஒன்று இருக்க வேண்டும் என்பது அனைத்துக் கால்நடை மருத்துவர்களின் விருப்பமாகும்,” என்றார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கால்நடை மருத்துவராக இருக்கும் திருவாட்டி சான்.

“கால்நடை மருத்துவம் என்பது வாடிக்கையாளர், மருத்துவர் மற்றும் நோயாளி ஆகிய மூவருக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சி. இதில் நோயாளியான விலங்கே முதன்மையாக இருக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“விலங்குகளின் நலனை மையமாகக் கொண்டு, சிகிச்சைகள் அல்லது பிற முறைகளை ஒப்புக்கொள்வதில் இந்த மூவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

“அதற்கு நல்ல தகவல் தொடர்பு மிகவும் அவசியம். பிரச்சினைகள் ஏற்பட்ட பிறகு அதைச் சரிசெய்வதை விட, அத்தகைய சூழல்கள் உருவாவதை முடிந்தவரை தவிர்க்கவே நாங்கள் முயல்கிறோம்,” என்று டாக்டர் சான் கூறினார்.

2027ஆம் ஆண்டு முதல் தனது பொறுப்புகளை படிப்படியாகச் செயல்படுத்தத் தொடங்கும் புதிய குழு, 2028ஆம் ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கால்நடைமருத்துவர்சிகிச்சை