பல்லின மக்களை ஒன்றிணைக்க உதவும் பன்மொழித் திறன்

பல்லின மக்களை ஒன்றிணைக்க உதவும் பன்மொழித் திறன்

2 mins read
aa061d80-e9e0-4a75-8fe5-d129fa76f49f
தமிழ், சீனமொழி, மலாய், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாகப் பேசும் ஓசிபிசி வங்கியின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி விக்கி இங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல்வேறு கலாசாரங்கள், பின்னணிகளைக் கொண்ட வாடிக்கையாளர்களிடம் தொடர்புகொள்ள பன்மொழித் திறன் பேரளவில் கைகொடுப்பதாக ஓசிபிசி வங்கியின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி விக்கி இங் தெரிவித்தார்.

தமிழ், சீனமொழி, மலாய், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் 29 வயது குமாரி இங் சரளமாகப் பேசக்கூடியர்.

இவரது தந்தை சீனர், தாயார் இந்தியர்.

நான்கு வயதாக இருக்கும்போதே திருவாட்டி இங் பாலர் பள்ளியில் மலாய்மொழி பயின்றார்.

“நானும் எனது சகோதரர்களும் பல மொழிகளில் பேசுவோம். இது எனக்கு அப்படியே பழகிவிட்டது,” என்றார் குமாரி இங்.

பல்லின வாடிக்கையாளர்களிடம் தொடர்புகொள்ள பன்மொழித் திறன் இவருக்கு உதவியாக உள்ளது.

“வாடிக்கையாளருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால், வாடிக்கையாளர் சேவை நிர்வாகி என்கிற முறையில் அவருக்குத் தெரியும் மொழியில் நான் அவரிடம் பேசுவேன்,” என்று குமாரி இங் கூறினார்.

முதலில் கோபமாகப் பேசும் வாடிக்கையாளர்கள், தாம் அவர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசத் தொடங்கியதும் அவர்களது கோபம் தணிந்துவிடுவதைக் குமாரி இங் உணர்ந்தார்.

பன்மொழி ஆற்றல் கொண்டவராக இருப்பதால் சொந்த வாழ்க்கையிலும் அது தமக்கு நன்மை பயப்பதாக அவர் கூறினார்.

பலதரப்பட்ட மக்களுடன் தொடர்புகொள்ளவும், பேசவும் தமது கருத்துகளை வெளிப்படுத்தவும் முடிவதாக அவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிலிருந்து 42,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்தி சிங்கப்பூரின் நான்கு அதிகாரபூர்வ மொழிகள் அல்லது வெளிநாட்டு மொழிகளைப் பயின்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையவாசலில் உள்ள மொழித் திறன் பயிற்சிகளுக்கான தேவை கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சீராக இருப்பதை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தற்போது மைஸ்கில்ஃபியூச்சர் திட்டத்தின்கீழ் 15க்கும் மேற்பட்ட மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

அவற்றில் ஜப்பானிய, கொரிய, தாய்லாந்து மொழிகளுக்கான பயிற்சிகள் பிரபலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்