இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜுன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
ராணுவ மருத்துவச் சேவைகள் புரிவதிலிருந்து கடற்படை மருத்துவச் சேவைகள் புரிய கற்றுக்கொண்ட அர்ஜுன், முக்குளிப்பது, உயர் அழுத்த மருத்துவம், கடற்படைச் செயல்பாட்டு மருத்துவம் எனப் பல திறன்களைக் கற்றுத்தேர்ந்தார்.
பயிற்சி தனக்கு அளித்த நம்பிக்கையை வைத்து அர்ஜுன் சிங்கப்பூர்க் கடற்படை ஏற்பாடு செய்துள்ள நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து தப்பிப்பு, மீட்புப் பயிற்சியில் திறம்படச் செயலாற்றி வருகிறார். சிங்கப்பூர்க் கடற்படை மூன்றாவது முறையாக இப்பயிற்சியை நடத்துகிறது.
எக்சர்சைஸ் பசிபிக் ரீச் 2025 (Exercise Pacific Reach 2025) என்றழைக்கப்படும் இப்பயிற்சி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து தப்பித்தல், மீட்புத் திறன்களை மேம்படுத்துதல், நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், கடலில் நீர்மூழ்கிக் கப்பல் மாலுமிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் எக்சர்சைஸ் பசிபிக் ரீச் பயிற்சியைச் சாங்கி கடற்படைத் தளத்தில் பார்வையிடும் வாய்ப்பைச் செய்தியாளர்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) பெற்றனர்.
சிங்கப்பூர்க் கடற்படை இதற்கு முன்னர் இப்பயிற்சியை 2000லும் 2010லும் நடத்தியது. இம்முறை இம்மாதம் 15ஆம் தேதியில் தொடங்கிய பயிற்சி 29ஆம் தேதியுடன் முடிவுறும்.
இப்பயிற்சியில் அர்ஜுன் நீர்மூழ்கிக் கலன் உதவியாளராக உள்ளார். அதில் அவர் காயமடைந்தவர்களின் பாதுகாப்பிற்குத் துணைநிற்க வேண்டும்.
குறிப்பாக, அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும்போது அர்ஜுனின் உதவி தேவைப்படும்.
தொடர்புடைய செய்திகள்
கடற்படையில் மருத்துவச் சேவைகள் புரிய கற்றுக்கொண்ட அர்ஜுன் தனது திறன்களை வைத்து, காயமடைந்தவர்கள் எத்தகைய வலியில் துடிக்கிறார்கள் என்பதை அவர்களின் முகபாவனைகளை வைத்து விரைந்து செயல்பட வேண்டும்.
மொத்தக் கப்பல்கள் பங்கேற்பின் அடிப்படையில் சிங்கப்பூர் பங்கேற்ற மிகப்பெரிய பயிற்சி இதுவாகும்.
இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தோனீசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, நெதர்லாந்து போன்ற 17 நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்று வருகின்றன. கிட்டத்தட்ட 600 பேர் இதில் பங்கேற்கின்றனர்.
இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி உதவிக் கப்பலான ஐஎன்எஸ் நிஸ்தார் பயிற்சியில் பங்கேற்க சிங்கப்பூருக்கு வந்துள்ளது.
“பயிற்சிக்கு அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்துவர வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். மருத்துவச் சேவை புரிபவர் என்பதால் எனது உடல்நலன்மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. கனமான பொருள்களைத் தூக்க வேண்டும். மூன்று வாரப் பயிற்சி சவால்மிக்கதாக இருந்தாலும் எனது பொறுப்புகளைத் தன்னம்பிக்கையுடன் கையாள நான் தயாரானேன்,” என்று சொன்னார் அர்ஜுன்.
இப்பயிற்சியில் பங்கேற்றதை நினைத்துப் பெருமைப்படும் அர்ஜுன், வெளிநாட்டுக் கடற்படைப் பிரிவினருடனான கலந்துரையாடல்கள் மூலம் மேலும் பலவற்றை கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறார்.
“இதர நாடுகளில் கடற்படை எவ்வாறு செயல்படும், அவர்களின் மருத்துவச் சேவைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன, அவர்கள் எவ்வாறு இத்தகைய பயிற்சிகளை நடத்துவர் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
“மேலும், இந்தப் பயிற்சி வெவ்வேறு கடற்படைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இந்தப் பயிற்சி கடற்கரை, கடல் என இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக் கட்டத்தில் மருத்துவக் கருத்தரங்கம், தேசிய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு அமைப்பு மாநாடு, பாதிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து பணியாளர்களை வெளியேற்றி, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற பாவனைப் பயிற்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடல் கட்டத்தின்போது தொடர் பயிற்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் மீட்புச் சேவைக் கப்பல்களின் செயல்முறைகள், நீர்மூழ்கிக் கப்பல்களுடனான ஒருங்கிணைப்பு ஆகியவை சோதிக்கப்படும்.
சிங்கப்பூர்க் கடற்படை, நீர்மூழ்கிக் கப்பல், நீர்மூழ்கிக் கலன் மீட்புக் கப்பல்கள் இரண்டும் தயாராக இருப்பதை உறுதிசெய்வதற்காகத் தொடர்ந்து இப்பயிற்சிகளை நடத்தி வருகிறது.
“பாதிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தொலைவில் இருக்கலாம், அதன் சரியான இடம் தெரியாமல் போகலாம். அதனால், பங்காளிகளுடன் சரியான நேரத்தில் ஒருங்கிணைவதும் மீட்பதும் மிகவும் முக்கியமானது. வெற்றிகரமான நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு என்பது, திறமையான மீட்புத் தளங்கள், அமைப்புகளைக் கொண்டிருப்பதை மட்டுமின்றி, தொடர்ச்சியான ஒத்துழைப்பு, சீரான செயல்முறைகள், ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் ஒருங்கிணைப்பு வைத்துக்கொள்வது ஆகியவற்றையும் சார்ந்துள்ளது,” என்று கடற்படைத் தொகுதி தளபதியும், பயிற்சி இயக்குநருமான ரியர் அட்மிரல் குவான் ஹான் சுவோங் விளக்கினார்.
“இப்பயிற்சி எங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள நல்ல தளமாக அமைந்துள்ளது. உண்மையில், ஒரு நீர்முழ்கிக் கப்பலுக்கு மீட்புப் பணிகள் செய்வதற்கான ஒரு சூழல் ஏற்பட்டால், எவ்வாறு திறம்படச் செயலாற்றலாம் என்பதற்கான வழியை இப்பயிற்சி எங்களுக்கு அமைத்துத் தந்துள்ளது,” என்று இந்திய கடற்படையின் கீழ்க்கடல் மீட்புப் பிரிவுக்கான (கிழக்கு) பொறுப்பு அதிகாரி கேப்டன் விகாஸ் கௌதம் கூறினார்.