இசை அனைவருக்குமானது என்றும் எந்த வகை இசையும் குறிப்பிட்ட சாராருக்கானது எனும் கருத்து தவறானது என்றும் நம்புவதாகக் கூறுகிறார் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் சந்தீப் நாராயண்.
இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் நான்கு வயதில் இசை பயிலத் தொடங்கினார். உலகின் பல நாடுகளில் அவர் இசைக் கச்சேரிகள் படைத்துள்ளார்.
தனது இசைப் பயணம், கர்நாடக இசை குறித்த தவறான புரிதல்கள், அதன் எதிர்காலம், இளையர்களின் ஈடுபாடு போன்றவை குறித்துப் பகிர்ந்துகொண்டார் சந்தீப்.
இம்மாத இறுதியில், ராமநவமிப் பண்டிகையையொட்டி சிங்கப்பூரில் இசைக் கச்சேரி நடத்தவுள்ள அவர், “இந்தியப் பாரம்பரிய இசை வகைகளில் ஒன்று கர்நாடக இசை. பெரும்பாலும் கோவில்களிலும் சமயம் சார்ந்த முக்கிய நிகழ்ச்சிகளிலும் அதிகம் பாடப்படுவதால் இதைப் பக்தியுடன் தொடர்புபடுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையன்று,” என்று தெரிவித்தார்.
இசை உணர்வுகளுடன் தொடர்புடையது என்று கூறும் சந்தீப், “கர்நாடக இசையில் ஒவ்வோர் உணர்வுக்கும், ஒவ்வொரு பருவகாலத்திற்கும், நாளின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற ராகங்கள் உண்டு. அந்த வகையில் பக்தி சார்ந்த தெய்வீக உண்ர்ச்சியும் ஒன்று. அது மட்டும்தான் என்றில்லை,” எனச் சொன்னார்.
“ஒரு குறிப்பிட்ட இசை வகையை உள்வாங்கி ரசிக்க அது குறித்த புரிதல் இருப்பது சிறந்தது என்றாலும் கர்நாடக இசை தெரிந்தால்தான் இசைக் கச்சேரி கேட்க முடியுமென்பதும் தவறான கருத்து,” என்றார் அவர்.
பொதுவாகவே பாடல் கேட்பதை விரும்பும் யாரும் எந்த வகை இசையையும் கேட்டு ரசிக்கலாம் எனவும் கூறினார். பல வகைப் பாரம்பரியக் கலைகளை ரசிக்கும் கூட்டம் குறைந்து வருவதைப் போலவே கர்நாடக இசை ரசிகர்களும் குறைந்து வருவது வருத்தமளிப்பதாக சந்தீப் கூறினார்.
மார்கழி மாத இசைக் கச்சேரிகளைக் கேட்க வருவோர் எண்ணிக்கை குறைகிறது என்ற கவலை துறை சார்ந்த அனைவருக்கும் இருப்பதை அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளி மாணவர்களிடம் பாரம்பரிய இசை, நடனம் உள்ளிட்ட கலைகளை அறிமுகம் செய்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறார் சந்தீப். சிறு வயதில் இவற்றை அறிமுகப்படுத்துவது, அவர்களது ஆர்வத்தைத் தூண்டி ஒரு நல்ல கலைஞராகவோ ரசிகராகவோ உருவாக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இளையர்களை இசையின்பால் ஈர்க்க சமூக ஊடகந்தான் சரியான வழி என்பதை அறிந்திருக்கும் சந்தீப் ‘இன்ஸ்டாகிராம்’, ‘யூடியூப்’ போன்ற தளங்களில் தொடர்ந்து காணொளிகளைப் பதிவேற்றி வருகிறார்.
“இளையர்களின் கவன நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது. சில நொடிகளுக்குள் அவர்களை ஈர்க்க வேண்டியுள்ளது. அதற்கேற்றவாறு காணொளிகள் தயாரித்து வெளியிடுகிறோம்,” என்றார் சந்தீப்.
இதில் குறை சொல்ல ஏதுமில்லை என்று சொன்ன அவர், ரசிகர்கள் விரும்பும் வண்ணம், விரும்பும் தளங்களின் உதவியுடன் அவர்களைச் சென்றடைய முடிகிறது என்பது அதன் சிறப்பு எனச் சொன்னார்.
பெருகிவரும் செயற்கை நுண்ணறிவு, கலைஞர்களின் படைப்புத் திறனைக் குறைக்காது என்று சொன்ன சந்தீப், “சொல்லப்போனால் செயற்கை நுண்ணறிவுடன் போட்டி போட்டுச் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் அது கலைஞர்களின் படைப்புத் திறனை அதிகரிக்கும் என்றே நினைக்கிறேன்,” என்றார்.
புதிய, இளம் இசைக் கலைஞர்கள் பயப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், “இப்போதுள்ள தொழில்நுட்ப உலகில் ரசிகர்களைச் சென்றடைய எளிதான வழிகள் ஏராளமாக உள்ளன. திறமையும் உழைப்பும் இருந்தால் யாரும் வெற்றியடையலாம் என்பது திண்ணம்,” என்றார் சந்தீப்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஏற்பாட்டில் மார்ச் 29ஆம் தேதி, சந்தீப் நாராயண் படைக்கும் ‘அவதாரம்’ இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. மாலை 6.30 மணியளவில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலருகே உள்ள பிஜிபி மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கச்சேரிக்கு அனுமதி இலவசம்.