செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் பயணச் சந்தை மாபெரும் மாற்றத்தைக் கண்டுவருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தெரிவுகளை ஏஐ எளிதாகச் செய்துகொடுக்கிறது.
இந்தச் சூழலில் முஸ்லிம் பயணிகள் சிங்கப்பூருக்குச் சுற்றுலா செல்ல முன்னுரிமை தருகின்றனர்.
உலக அளவில் 11ஆவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. முஸ்லிம் அல்லாத நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
முஸ்லிம்கள் பின்பற்றும் ஹலால் முறையில் பயண வசதிகளைச் செய்துகொடுப்பது அதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
மாஸ்டர்கார்ட், கிரெசென்ட் ரேட்டிங் இணைந்து நடத்திய அனைத்துலக முஸ்லிம் பயணக் குறியீட்டு ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை (ஜூன் 18) வெளியான தரவில் சிங்கப்பூருக்கு 72 புள்ளிகள் கிடைத்தன.
உலகளவில் மலேசியா தொடர்ந்து 11ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 79 புள்ளிகளுடன் இந்தோனீசியா, துருக்கி, சவூதி அரேபியா உள்ளன.
முஸ்லிம் அல்லாத நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹாங்காங் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹலால் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, பல்லினச் சமூகம், அறிவார்ந்த கட்டமைப்புகள் போன்றவை சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தந்துள்ளன.
இதற்கிடையே ஐந்தில் நான்கு பயணிகள் தங்களது பயணத்தை ஏஐ மூலம் திட்டமிடுவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. புதிய இடங்களைக் கண்டறிவது, மதிப்பிடுவது உள்ளிட்ட பல அம்சங்கள் ஏஐயில் உள்ளதால் அதைப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது.
150 இடங்களை ஆராய்ந்து, 98 விழுக்காட்டுக்கும் அதிகமான முஸ்லிம் பயணிகளிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
128 மில்லியன் முஸ்லிம் பயணிகள் ஆசிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அது மொத்த எண்ணிக்கையில் 20.8 விழுக்காடாக உள்ளது.

