ஹஜ்ஜுப் பெருநாள் எனும் ஈகைத் திருநாள் ஜூன் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாட சிங்கப்பூர் பள்ளிவாசல்களும் பொதுமக்களும் தயாராகி வருகின்றனர்.
இப்பண்டிகை இஸ்லாம் சமயத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து கடமைகளில் ஒன்றான ‘ஹஜ்’ என்பதனை மையமாகக் கொண்டது.
இதையொட்டி இஸ்லாமிய இறை தூதர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
இப்பண்டிகைக்காக சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களும் இஸ்லாமியர்களும் பல்வேறு தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்துல் கஃபூர் பள்ளிவாசல் காலை 7.20 மணிக்குத் தொடங்கி மூன்று அமர்வுகளுக்குத் தயாராகி வருவதாக அப்பள்ளிவாசலின் மேலாளர் முகமது இதிரிஸ் தெரிவித்தார்.
இவ்வாண்டுத் தொழுகையில் ஏறத்தாழ 3,600 பேர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு வரை குர்பான் சடங்குக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து வெள்ளாடுகள் தருவிக்கப்படும் என்றும் அது தற்போது நடைபெறுவதில்லை என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பண்டிகைகளை கொண்டாடும் முறை காலத்திற்கேற்ப மாற்றம் கண்டாலும், அப்பண்டிகைகள் உணர்த்தும் பாடங்கள் அனைவர்க்கும் சரியாகப் போய்ச் சேரவேண்டும் என இவர் விருப்பம் தெரிவித்தார்.
இப்பண்டிகையைக் கொண்டாடும் அனைவர்க்கும் இறைவனின் ஆசீர்வாதமும் கருணையும் வாழ்வில் அமைதியும் செழிப்பும் உண்டாக வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார்.
பண்டிகைகள் வெறும் சடங்குகளாக இல்லாமல் உணர்ந்து கொண்டாடும் தன்மை தற்போது குறைந்துள்ளதாகக் கவலை தெரிவித்த இதிரிஸ், இப்பண்டிகை உணர்த்தும் தியாகத்தை அனைவரும் உணர்ந்து வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்றும் சொன்னார்.
“இயலாதோர்க்கு உதவி செய்வதும் விருந்தினர்களை உபசரிப்பதும் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் முக்கிய அடையாளம். அந்த நற்குணங்களை வாழ்வின் படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்றார் இமாம் அஜீஜுல்லாஹ் ஹஸனி.
ஏறத்தாழ 500 முதல் 600 பேர் கொண்ட ஒரே தொழுகை அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பென்கூலன் பள்ளிவாசலில் 100 பெண்கள் தொழுகை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி. மு.யூ. முகம்மது ரஃபீக்.
இளையர்களிடம் சகிப்புத்தன்மையும் போராடும் குணமும் குறைந்து வருவதையும் அவர்கள் இலகுவான பாதையையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் சுட்டிக்காடிய அவர், தியாகம், சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்களே சமூகத்தில் உயர்வை அடைகிறார்கள் என்ற உண்மையைத் இந்தத் தியாகத் திருநாள் நம் வருங்காலச் சந்ததினர்களுக்குக் கற்பிக்கிறது என்று சொன்னார்.
இப்பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாடத் தயாராகிவரும் ரெய்ஹானா அப்துல்லா, 52, தமது சொந்தத் தேவைகளைத் தாண்டிப் பிறருக்கு உதவக்கூடிய எண்ணத்தை உருவாக்க இப்பண்டிகை நல்வாய்ப்பாக அமையும் என்றார்.
மணம் முடித்து முதன்முறையாகத் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடவுள்ள முகமது கிதிர்தீன் ரைசாமெனா ஷைனஸ் இணையர், கிடைத்துள்ள வாழ்க்கைக்கு நன்றி சொல்லி இப்பண்டிகையைத் தாங்கள் கொண்டாட உள்ளதாகக் கூறினர்.

