சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 17ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவர் என சிங்கப்பூரின் முஃப்தி நஸிருதின் முகம்மது நசிர் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 7) அவர் வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமிய நாள்காட்டியின் 12வது மாதமான துல்ஹஜ், சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்குவதாகக் கூறினார். வெள்ளிக்கிழமை இரவு சூரியன் மறைந்தவுடன் துல்ஹஜ் மாதத்துக்கான பிறை தென்பட்டதைத் தொடர்ந்து முஃப்தி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ்ஜுப் பெருநாள், துல்ஹஜ் மாதத்தின் 10வது நாள் கொண்டாடப்படுகிறது. சவூதி அரேபியாவில் புனிதத் தலமான மெக்காவில் ஹஜ் புனித யாத்திரையின் நிறைவை அது குறிக்கிறது.
துல்ஹஜ் மாதத்தை வரவேற்று, நற்குணத்துடன் அதை உயிரூட்டுமாறு சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்களுக்கு முஃப்தி அழைப்பு விடுத்தார்.
“தற்போது ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் சிங்கப்பூர் யாத்ரிகர்களின் பாதுகாப்புக்காக நாம் துஆ செய்வோம்.
“ஈதுல் அழ்ஹாவுக்குப் பின்னால் உள்ள தியாகத்தின் அர்த்தத்தைப் பற்றி நாம் சிந்தித்து, அதை முழுக் கருணையுடன் கொண்டாடுவோம்,” என்று முஃப்தி கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 900 முஸ்லிம் யாத்ரிகர்கள் இவ்வாண்டு மெக்காவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.