கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பின்னர் முஸ்தஃபா கடைத்தொகுதி மீண்டும் அதன் வழக்க 24 மணிநேரச் சேவையைத் தொடரவுள்ளது. அடுத்த மாதம் ஆறாம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடப்புக்கு வரும்.
தற்போது காலை 9.30 மணியிலிருந்து அதிகாலை 2.30 மணி வரை முஸ்தஃபா கடைத்தொகுதி செயல்பட்டு வருகிறது.
கொவிட்-19 காலத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முஸ்தஃபா கடைத்தொகுதி அதன் 24 மணிநேரச் சேவையை நிறுத்தியது.
இதுகுறித்து தமிழ் முரசிடம் பேசிய முஸ்தஃபா கடைத்தொகுதியின் மேலாண்மைக் குழு, “24 மணிநேரச் சேவை வழங்குவதற்கான அடையாளத்தை நாங்கள் கொண்டுள்ளோம். இது எங்கள் முத்திரை என்பதால், மீண்டும் எப்பவும்போல எங்கள் வாடிக்கையாளர்கள் கடைத்தொகுதிக்கு எந்நேரமும் வந்து செல்லலாம்,” என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த மாற்றத்தால் அதிகமான வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்பதாக கூறிய அவர்கள், 24 மணிநேர தடையற்ற சேவையை வழங்கக் கூடுதலான ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றனர்.

